கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 34 பேர் பலி! 100 பேர் கவலைக்கிடம்!

top-news
FREE WEBSITE AD

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். இவர் பலமுறை கள்ளச்சாராய வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கள்ளச்சாராயம் விற்று வந்த கோவிந்தராஜிடம் அப்பகுதி மக்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததால், வாந்தி மயக்கம் காரணமாக பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பலி எண்ணிக்கை தற்போது வரை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 19பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 8 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 பேரும், விழுப்புரத்தில் 4 பேர் என 34 பேர் இதுவரை மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 

இதற்கிடையே, அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் மெத்தனால் ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் இருந்து 4 சிறப்பு மருத்துவ குழுவினர், தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சிகிச்சை பெற்று வருவோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். 

ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதியஎஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை. நிவாரணம், உயர் சிகிச்சை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல். கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் தமிழக முதல்வர் ஆலோசிக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *