16ஆவது பொதுத் தேர்தலில் 40% மகளிர், இளைஞர்கள் போட்டியிட வேண்டும் - நூருல் இஸ்ஸா!

- Muthu Kumar
- 26 May, 2025
ஜொகூர் பாரு. மே 26-
நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிகேஆர் வேட்பாளர்களில், குறைந்தது 40 விழுக்காட்டினர் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று. அக்கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் விருப்பம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலச் சவால்களை சந்திக்க போதுமான அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள கட்சிக்குட்பட்ட சீர்திருத்தங்களை கட்சி எவ்வாறு மேற்கொள்ள விருக்கிறது என்பதுதான் பிகேஆர் மாநாட்டின் முக்கிய கவனமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். "நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 24 மாதங்களே எஞ்சியிருக்கும் வேளையில், மகளிர் மற்றும் இளைஞர்களின் அதிகாரம் மற்றும் குரல்களை முழுமையாக பயன்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்" என்று, நூருல் இஸ்ஸா தெரிவித்துள்ளார்.
ஜொகூர் பாருவில் உள்ள பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முடிவுற்ற பிகேஆர் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியுமான நூருல் இஸ்ஸா இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு கட்சி தொடர்ந்து துடிப்புடனும் தனது கொள்கைகளை தொடர்ந்து வலுப்படுத்தியும் வரவேண்டும்.“கட்சித் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வியுற்றாலோ, நமக்கு இடையிலான நட்புறவை நிலைநாட்ட வேண்டியது மிகவும் முக்கியம்" என்று, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான நூருல் தெரிவித்தார்.
இதனிடையே, கட்சிப் பேராளர்கள் மத்தியில் தமது எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தியதற்காக, கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை அவர் பாராட்டினார்.
பக்காத்தான் ஹராப்பானின் தலைமைச் செயலாளர் எனும் முறையில் சனிக்கிழமை பேரவையில் முன்னதாக உரையாற்றிய சைஃபுடின், பிகேஆர் கட்சி டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியை நிரந்தரமாக இழந்துவிடக் கூடிய சாத்தியம் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார்.
கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், அம்முடிவில் தாம் ஒரு கலவையான உணர்வைக் கொண்டிருப்பதாகவும் சைஃபுடின் கூறியிருந்தார்.துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற நூருல் இஸ்ஸா 9,803 வாக்குகளையும் ரபிஸி 3,866 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
Nurul Izzah mahu 40% calon PKR dalam PRU ke-16 terdiri daripada wanita dan belia. Beliau tekankan kepentingan reformasi parti, keterbukaan, dan persediaan menghadapi cabaran masa depan bagi mengukuhkan kekuatan dan suara dalam pentas politik negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *