மலாக்கா மாநிலத்தின் 'டத்தோ ஸ்ரீ' பட்டத்தை வாங்கித் தருவதாக வெள்ளி 48,000 மோசடி!
- Muthu Kumar
- 11 Oct, 2024
மலாக்கா, அக். 11
மலாக்கா மாநிலத்தின் 'டத்தோ ஸ்ரீ' பட்டத்தை வாங்கித் தருவதற்காக, கடந்த ஆண்டில் ஒரு வர்த்தகரிடம் 48,000 வெள்ளி கேட்டு அதைப் பெற்ற விவகாரம் தொடர்பிலான ஒரு விசாரணைக்கு உதவுவதற்காக, பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் செய்தியாளரும் ஓர் அரசு சாரா அமைப்பின் உறுப்பினருமான 42 வயதுடைய அப்பெண்ணை தடுத்து வைக்கும் உத்தரவை, மாஜிஸ்டிரேட் நோர் ஷாலியாத்தி முஹமட் சோப்ரி வெளியிட்டார்.கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த மாநில விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒட்டி, டத்தோ ஸ்ரீ விருதை வாங்கித் தருவதற்கு கைம்மாறாக அந்த வர்த்தகரிடமிருந்து லஞ்சமாக 48,000 வெள்ளியைப் பெற்றதாக அவர் மீது சந்தேகிக்கப்படுவதாக வட்டாரம் ஒன்று கூறியது.
கடந்த 2022 முதல் 2023ஆம் ஆண்டுக்கிடையில் அந்தப் பணம் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது, தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவ்வட்டாரம் கூறியது.அப்பெண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை மலாக்கா மாநில மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணைய (எம்ஏசிசி) இயக்குநர் அடி சுப்பியான் ஷஃபி உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் அளிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னர் மலாக்கா எம்ஏசிசி அலுவலகம் வந்த அப்பெண், நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *