இந்தியாவின் கேரள வயநாடு நிலச்சரிவு விபத்தின் 4வது நாளில் 4 பேர் உயிருடன் மீட்பு!
- Muthu Kumar
- 02 Aug, 2024
இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு 4வது நாளில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உறவினர்கள் காட்டிய இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டபோது, நான்கு பேர் அங்கு சிக்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.
படவெட்டி குன்னு என்ற இடத்தில் தங்களது உறவினர்கள் வசித்து வந்த நிலையில், அவர்களைக் காணவில்லை என்று மக்கள் மீட்புப் படையினரிடம் தெரிவித்த நிலையில், ராணுவ வீரர்கள் அங்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட போது, சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நவீன ரக சிறு ஹெலிகாப்டர் மூலம் நான்கு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றுள்ளன. மக்கள் கொடுத்த தகவலை ஏற்று உடனடியாக ராணுவத்தினர் நடத்திய மீட்புப் பணியால் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மீட்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், இந்திய ராணுவத்தினர், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் உயிருடன் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உடல்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 317 பேர் பலியாகியிருப்பதாகவும், மேலும் 220 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *