இந்தியாவுக்கு 500% வரி? அமெரிக்காவில் கொண்டு வரப்படும் புதிய மசோதா!

top-news
FREE WEBSITE AD

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இந்தியா மீது 500% வரை வரி விதிக்கக்கூடிய ஒரு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கலாகவுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே நீண்ட காலமாகவே நல்லுறவு இருக்கிறது. இரு தலைவர்களுமே பரஸ்பர அன்பைப் பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையும் கூட தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் மசோதாவால் இந்தியாவுக்கு 500% வரி விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் ஆதரவுடன் கொண்டு வரப்படும் இந்த மசோதா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்குக் கூடுதல் வரிகளை விதிக்க வலியுறுத்துகிறது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். கூடுதல் வரிகளை விதித்தால் உலக நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யாது.

இதனால் வேறு வழியில்லாமல் ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் என்பதே இந்த மசோதாவின் திட்டம். இருப்பினும், ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்யும் நிலையில், இதனால் இந்தியாவுக்கும் 500% வரி விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்கக் குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் ஆதரவுடன் செனட் சபையில் இந்த மசோதாவை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதன்படி ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வரும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரை வரி விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ரஷ்யாவிடமிருந்து பொருட்களை வாங்கி உக்ரைனுக்கு உதவ மறுக்கும் நாடுகளின் பொருட்கள் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும்போது 500% வரி விதிக்கப்படும். ரஷ்யாவின் எண்ணெய்யை 70% வாங்குவது இந்தியாவும் சீனாவும் தான். அவர்கள் தான் ரஷ்யாவின் போர் தொடர காரணமாக இருக்கிறார்கள்" என்றார்

இந்த மசோதா இந்த மாதம் ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யாவைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், ரஷ்யக் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கும் நாடுகளான இந்தியாவிற்கும் சீனாவிற்குமே கடுமையான பாதிப்புகள் ஏற்படும். இந்தியாவின் மருந்துகள், ஜவுளி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் போன்ற ஏற்றுமதிகள் அமெரிக்காவில் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உக்ரைன் போர் தொடங்கிய மூன்றாம் ஆண்டில் இந்தியா 49 பில்லியன் யூரோ மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. வழக்கமாக, இந்தியா மத்தியக் கிழக்கு நாடுகளிடமிருந்து தனது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிப்ரவரி 2022க்கு பிறகு ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

முதலில் இந்த மசோதா கடந்த மார்ச் மாதம் முன்மொழியப்பட்டது. ஆனால் அப்போது வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா தாக்கலாகவில்லை. மேலும், இந்த மசோதாவில் சில மாற்றங்களைச் செய்ய டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்திருக்கிறது. இந்தச் சூழலில் டிரம்ப் இந்த மசோதாவுக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மசோதாவுக்கு இதுவரை 84 எம்பிக்கள் ஆதரவளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் இந்த மசோதா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *