மாடுகள் வளர்ப்போருக்கான திட்டத்தில் 7 இந்தியர்களுக்கு 5 ஏக்கர் நிலம்!
- Muthu Kumar
- 15 Oct, 2024
பந்திங், அக்.15-
மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை உள்ளடக்கிய நடவடிக்கையாக மாடுகள் வளர்ப்போருக்கான இந்த திட்டத்தில் மாவட்டரீதியில் இருக்கும் 7 இந்தியர்கள் ஓலாக் லெம்பிட் புறநகர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தைப் பெற்று பயனடைய உ ள்ளனர் என்று கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி தெரிவித்தார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்துள்ள இந்தப் பிரச்சினை தொடர்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், அதே வேளையில் மாநில அரசு செயலகத்தில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரிகளிடமும் பல முறை சந்தித்துப் பேசி இதற்கான தீர்வை காணும்படி தாம் முன்வைத்த கோரிக்கைகள் விளைவாக தற்போது இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இவ்வட்டாரத்தில் மாடுகளை பராமரித்து வளர்த்து வரும் 7 இந்தியர்கள் அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கிடைத்துள்ளது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
நேற்று காலையில், கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த மாடுகள் வளர்ப்போரிடம் அதற்கான உறுதிக் கடிதங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பேசிய ஹரிதாஸ் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
கடந்த காலங்களில், இரவு நேரங்களில் பராமரிப்பாளர் இன்றி மாடுகள் சாலையோரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு வந்து போவதால் அதனால் பாதிப்புகளும் அதே வேளையில் குடியிருப்பாளர்கள் மத்தியில் இருந்து பல தரப்பட்ட புகார்களும் கோலலங்காட் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகள் தொடர்ந்து பெற்று வந்துள்ளனர். இதன் தொடர்பில் அத்துமீறி மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை அமலாக்க அதிகாரிகள் பிடித்து வைத்ததோடு, பின்னர் அதன் உரிமையாளர்கள் உரிய அபராதத் தொகை செலுத்திய பின்னரே பிடிபட்ட மாடுகள் மீட்கப்பட்ட சம்பவங்கள் இங்கு பல முறை நடந்துள்ளதால் இனி வருங்காலங்களில் மாடு வளர்ப்போர் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட நிலப் பகுதியில் மட்டுமே அவற்றை வளர்த்து பராமரித்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார்.
மாநில கால்நடை இலாகா மாடு வளர்ப்போருக்கான திட்டத்தில் இவ்வட்டாரத்தில் 110 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதால் இதுவரைக்குமான இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் ஆலோசனையின் பேரில் தற்போது இதற்கான தீர்வு பிறந்து ள்ளதாக கோலலங்காட் கெ அடிலான் தொகுதித் தலைவருமான ஹரிதாஸ் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *