ஆற்றை கடக்க முயன்ற 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி!
- Muthu Kumar
- 30 Jun, 2024
இந்தியாவின் புதுடெல்லி லடாக்கில் ஆற்றை கடக்க முயன்ற போது, ராணுவ டேங்குடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லடாக் தலைநகர் லேயிலிருந்து 148 கிமீ தொலைவில் உள்ள மந்திர் மோர் பகுதிக்கு அருகே நியோமோ சுஷுல் பகுதி அமைந்துள்ளது. சீன எல்லை அருகே கட்டுப்பாடு கோட்டுக்கு (எல்ஏசி) அருகே நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலை 1 மணி அளவில் டி-72 ராணுவ டேங்குடன் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி உட்பட 5 பேர் ஷியோக் ஆற்றை கடக்க முயன்றனர். பனி உருகியதால் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ராணுவ டாங்க் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 5 வீரர்களும் வீரமரணம் அடைந்ததாக ராணுவம் உறுதிபடுத்தி உள்ளது.
ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாகவும், வீரர்கள் சிலரின் உடல் மீட்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தள பதிவில், ''லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
துணிச்சலான வீரர்கள் நமது தேசத்துக்கு அளித்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். துயரமான இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது'' என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கமான இந்த நேரத்தில், நமது வீரம் மிக்க ராணுவ வீரர்களின் முன்மாதிரியான சேவைக்கு தேசம் ஒன்று சேர்ந்து வணக்கம் செலுத்துகிறது'' என கூறி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ''5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்'' என்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''லடாக்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உயர்ந்த தியாகத்திற்காக நமது துணிச்சலான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்'' என கூறி உள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *