திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பக்தர்கள் உயிரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் பெற பக்தர்கள் டிக்கெட் கவுன்ட்டரில் முண்டியடித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்கவும், வைகுண்ட வாயில் வழியாகச் செல்லவும் தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வெளியிட முடிவு செய்து திருமலை,திருப்பதி உள்பட 9 இடங்களில் 94 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த கவுன்ட்டர்களில் பக்தர்கள் புதன்கிழமை காலை முதல் காத்திருக்கத் தொடங்கினர். இதனால் அனைத்துப் பகுதியில் உள்ள கவுன்ட்டர்களும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.இந்நிலையில், புதன்கிழமை இரவு 9 மணி அளவில் வெளியில் காத்திருந்த பக்தர்கள் அனைவரும் தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரே சமயத்தில் தரிசன வரிசைகள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பலர் மயக்கமடைந்தனர். அவர்களில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு 6 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனிடையே திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *