மும்பையில் பயங்கரமான சூறாவளிக்கு 8 பேர் பலி!

top-news
FREE WEBSITE AD

மும்பையில் தாணே மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பலமாக வீசிய சூறைக்காற்று வீசியது.

40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில், பலமாக வீசிய சூறைக்காற்றில் செட்டாநகர் சந்திப்பில் கட்கோபார் பகுதியில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 75 அடி உயர விளம்பரப் பதாகை ஒன்று சரிந்து விழுந்ததில் பெட்ரோல் நிலையம் அருகே நின்றிருந்த பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 60க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின் மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷன் கக்ராணி கூறியதாவது, இந்த விபத்தில் 8 பேர் பலியானதாகவும், இன்னும் 30 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும்' தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கனமழை, மோசமான வானிலையால் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் சுமார் 1 மணி நேரம் மூடப்பட்டது. இதன் காரணமாக 15 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *