ஈப்போ லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தையில் 96 வியாபார கூடாரங்கள்!
- Muthu Kumar
- 10 Oct, 2024
ஈப்போ, அக்.10-
ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் வியாபாரம் செய்து வரும் வணிகர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் வியாபார பிரச்சினைகளை கேட்டறிந்ததாக ம இ கா வின் தேசிய உதவித்தலைவரும், பேராக் மாநில ம இ கா வின் தலைவருமாகிய டான்ஸ்ரீ மு.இராமசாமி கூறினார். இந்த வருகை முதல் வருகையாக இருந்தாலும் இங்குள்ள ஈப்போ லிட்டில் இந்தியா வணிக சங்கத்திற்கு தலைவர் விக்னேஸ் தில்லை மற்றும் அவர் தம் செயலவையினர் வற்றாத ஆதரவும், அமோக வரவேற்பும் வழங்கியதற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இங்குள்ள வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இவர்களின் வணிக சங்கத்திற்கு எவ்வாறு உதவ முடியும் என்று ம இ கா வின் தேசிய தலைவருடன் கலந்தாலோசித்து அவரின் ஆலோசனையின் அடிப்படையில் உதவிகள் வழங்க முயற்சி செய்யப்படும். அத்துடன் இங்குள்ள வணிகர்களை போல இளைய தலைமுறையினரும் வணிகத்தில் ஈடுபாடு காட்ட ஊக்கவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கி 31 வரை இந்த லிட்டில் இந்தியா வளாகத்தில் தீபாவளி சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ லிட்டில் இந்தியா வணிக சங்க தலைவர் விக்னேஸ் தில்லை கூறினார்.
இந்த தீபாவளி சந்தையில் 96 வியாபார கூடாரங்கள் அமைக்கப்பட்டு சிறுவியாபாரிகளிடம் வழங்கப்படும். அத்துடன், இறுதி 5 நாட்களில் மேடையமைத்து இந்திய கலை கலாச்சார பண்பாட்டு கலைநிகழ்ச்சியும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆகவே, பொதுமக்கள் கலைநிகழ்ச்சியை பார்த்தவாறு தீபாவளி பண்டிக்கைக்கு வேண்டிய பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு இந்த லிட்டில் இந்தியா வளாகத்தில் நடைபெறும் தீபாவளி சந்தை மிகவும் சிறப்பாகவும், பல்வேறு மாற்றங்களுடன் செயல்படும். இப்பொழுது புதிய நிர்வாகம் சங்கத்தை நிர்வகித்து வருகின்றது என்று பேராக் மாநில நகைக்கடை சங்கத் தலைவரும், ஈப்போ லிட்டில் இந்தியா வணிக சங்கத்தின் ஆலோசகருமாகிய டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *