இந்தியாவின் தேசிய விளையாட்டு தினத்தில் ராகுல்காந்தி பகிர்ந்த காணொளி!
- Muthu Kumar
- 30 Aug, 2024
இந்தியாவின் ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மறைந்த மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் எம்.பி ராகுல்காந்தியின் இன்னொரு முகத்தை அறியும் வகையில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளது.
அதில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது பயிற்சியாளர் மற்றும் மாணவர்களுடன் அவர் மேற்கொண்ட தற்காப்புக் கலை பயிற்சி காணொளியை வெளியிட்டுள்ளது.
அந்த காணொளியில் உள்ள பயிற்சியாளருடன் தற்காப்புக் கலை பயிலும் மாணவர்களுடன் 'பிளாக் பெல்ட்' பெற்ற ராகுல் காந்தி பல்வேறு பயிற்சி மேற்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு தற்காப்பு கலை நுணுக்கங்கள் குறித்து கற்றுக்கொடுப்பதும் காட்டப்பட்டுள்ளது.
எப்போதும் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் ராகுல்காந்தி, ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்றா என்ற வசனத்திற்கு ஏற்ப தற்காப்பு கலை பயிற்சி பெறும் காணொளி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.இதனை தனது எக்ஸ் தள பக்கத்திலும் பகிர்ந்துள்ள ராகுல் தனது அனுபவத்தை விவரித்துள்ளார்.
"பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்தபோது எங்கள் முகாம் தளத்தில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து சமூக நடவடிக்கையாக உருவானது.
தியானம், ஜியு-ஜிட்சு, ஐகிடோ மற்றும் வன்முறையற்ற மோதலைத் தீர்க்கும் நுட்பங்களின் இணக்கமான கலவையான 'ஜென்டில் ஆர்ட்'-ன் அழகை இந்த இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது.
வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதை நோக்கமாகக் கொண்டோம், மேலும் இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம்.
இந்தியாவின் தேசிய விளையாட்டு தினத்தில் உங்களில் சிலரை 'ஜென்டில் ஆர்ட்' பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் நம்பிக்கையில் எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்." எனறு ராகுல் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *