ரஜினிகாந்த் - சீமான் திடீர் சந்திப்பு! - தமிழக அரசியலில் பரபரப்பு!
- Muthu Kumar
- 22 Nov, 2024
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர். குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது அதை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசியவர். தமிழினத்தின் பெருமையும், வரலாறும் தெரியாதவர் எதற்காக எங்களை ஆள வேண்டும் என்று அப்போது கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தமிழர் அல்லாதவர் இங்குத் தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் கூறியிருந்தார். ஓரிரு முறை மிகக் கடுமையான வார்த்தைகளைக் கொண்டும் அவர் விமர்சித்து இருந்தார்.
அதேநேரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தவுடன், சீமான் தனது விமர்சனங்களை நிறுத்திக் கொண்டார். குறிப்பாக 2022 டிசம்பர் மாதம், ரஜினிகாந்த்தை அரசியல் ரீதியாக விமர்சித்த போது கடும் சொற்களைப் பயன்படுத்தியது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று கூட கூறியிருந்தார். ரஜினி அரசியலைக் கடுமையாக விமர்சித்த சீமான், அவர் அரசியலுக்கு வரவில்லை என்றவுடன் தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியிருந்தார்.
இந்தச் சூழலில் சீமான் இப்போது திடீரென நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் தமிழ் சினிமா குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் விஜய் வருகையை இப்போது சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினிகாந்தை சீமான் சந்தித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை சீமான் நேரடியாகச் சந்தித்துள்ளார். போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்குச் சென்ற சீமான், அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். தமிழ்நாடு அரசியலில் இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *