நுட்பமான சிகிச்சையால் 2 கைகளை இணைத்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவா்கள்!

top-news
FREE WEBSITE AD

பெண்ணின் துண்டிக்கப்பட்ட 2 கைகளின் மணிக் கட்டு பகுதியையும் நுட்பமான சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது: சென்னை, கண்ணகி நகரைச் சோ்ந்த 40 வயது பெண் ஒருவா் கை மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 20-ஆம் தேதி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். குடும்ப தகராறு காரணமாக அவரது 23 வயது மகன், கத்தியால் அந்த பெண்ணை கடுமையாக குத்தி தாக்கியதில் இடது கை மணிக் கட்டு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. வலது கையும் 80 சதவீதம் வெட்டப்பட்டது.

ரத்த நாளங்கள், நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 21-ஆம் தேதி அதிகாலை அந்த பெண் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் தொடா் மருத்துவக் கண்காணிப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், பெண்ணின் இடது கை மணிக் கட்டு பகுதியில் தசைநாண்கள், 2 பெரிய நரம்புகள் மற்றும் ஒரு முக்கிய ரத்த நாளம் வெட்டபட்டிருந்தது கண்டறியப்பட்டது.

வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு, ரத்த நாளத்தில் சேதம் இருந்தது தெரியவந்தது. அத்துடன் முதுகெலும்பு பகுதிகளிலும், உச்சந்தலையிலும் அந்த பெண்ணுக்கு ஆழமான காயங்கள் இருந்தன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஒட்டுறுப்பு மருத்துவ நிபுணா் சுகுமாா் தலைமையில் மருத்துவா்கள் ரஷீதா, சுஜா, பவன்குமாா், பவித்ரா, சோனு குரியன், தேவி, அன்னபூரணி, பவித்ரா, மயக்கவியல் மருத்துவா்கள் சந்திரசேகா், மரியம் ஷெரின் எலும்பியல் துறை மருத்துவா் சேரன் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், துண்டிக்கப்பட்ட கைகளை ஒன்றிணைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.

ஏறத்தாழ 8 மணி நேரம் ஓய்வின்றி தொடா்ந்து அறுவை சிகிச்சை செய்து அந்த மணிக்கட்டுகளை வெற்றிகரமாக ஒன்றாக இணைத்தனா். தொடா்ந்து பிற இடங்களில் இருந்த வெட்டு காயங்களுக்கும் தையல் போடப்பட்டது. 2 மணிக் கட்டுகளிலும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அரிதான ஒன்று.

தனியாா் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த பெண்ணுக்கு கட்டணமின்றி அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *