சார்க் பதிலாக புதிய அமைப்பு பாகிஸ்தான்,சீனா இணைந்து முயற்சி!

- Muthu Kumar
- 01 Jul, 2025
தெற்காசிய நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சார்க் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு வங்கதேச தலைநகர் தாகாவில் உருவாக்கப்பட்டது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2016 சார்க் உச்சிமாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்தது. ஆனால் அந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி காஷ்மீரின் உரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தானும் இஸ்லாமாபாத் கூட்டத்தை புறக்கணித்ததால், சார்க் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது.
அதன் பின் சார்க் அமைப்பு செயல்படாமல் இருக்கும் நிலையில், தற்போது புதிய கூட்டணியை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிராந்திய ஒருங்கிணைப்புக்கு புதிய அமைப்பு தேவை என இரு நாடுகளும் உறுதியாக நம்பும் நிலையில், சமீபத்தில் சீனாவின் குன்மிங்கில் பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் இடையே முத்தரப்பு சந்திப்பு நடந்துள்ளது.
இதில், சார்க் அமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் புதிய குழுவில் சேர்ப்பது குறித்து விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, புதிய அமைப்பில் சேர இந்தியா, ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை வங்கதேச வெளியுறவு ஆலோசகர் டூஹித் ஹுசைன் மறுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *