சிந்து நதி நீர் குறித்த மறுஆய்வுக்கு பாகிஸ்தானுக்கு ஆர்வம் இல்லை-நிபுணர்கள் கருத்து!
- Muthu Kumar
- 20 Sep, 2024
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அந்த ஒப்பந்தத்தை முக்கியமானதாக கருதுவதாக பாகிஸ்தான் பதில் அனுப்பியுள்ளது.
கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இந்தியா -பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது எல்லைதாண்டிய நதிகளை நிர்வகிப்பதை நோக்கமாக கொண்டது. இந்நிலையில் எல்லைதாண்டிய தீவிரவாத சூழ்நிலைகள் மற்றும் தாக்கங்களில் அடிப்படை மற்றும் எதிர்பாராத மாற்றங்களை மேற்கோள் காட்டி 64 ஆண்டுகால ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
இது தொடர்பாக ஆகஸ்ட் 30ம் தேதி இந்தியா பாகிஸ்தானுக்கு முறையான நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலக செய்தி தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் கூறுகையில், ''சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முக்கியமான ஒன்றாக பாகிஸ்தான் கருதுகிறது. மேலும் அதன் விதிகளுக்கு இந்தியாவும் இணங்கும் என்று நம்புகிறோம். இரு நாடுகளும் சிந்து நதி நீர் ஆணையர்களின் பொறிமுறையை கொண்டுள்ளது.
ஒப்பந்தம் குறித்த அனைத்து விஷயங்களும் இதில் விவாதிக்கப்படலாம். ஒப்பந்தம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான எந்வொரு நடவடிக்கையும் ஒப்பந்தத்தின் விதிகளுக்குள் எடுக்கப்பட வேண்டும்" என்றார். பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளரின் இந்த பதில் மூலமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதில் அந்நாட்டுக்கு ஆர்வம் இல்லை என்பது தெரிவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *