தேசிய தாத்தா,பாட்டி தினத்தில் கமலா ஹாரீஸின் பசுமையான எக்ஸ் தள பதிவு!
- Muthu Kumar
- 09 Sep, 2024
தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் கண்டுவருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் தீவிரப் பிரசாரத்தின் மூலம் கமலா ஹாரிஸுக்கு பெரும் சவாலாகவே முன்நகர்கிறார்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் தான் வளர்ந்த விதம் குறித்தும், தன்னைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் குறித்தும் பிரசாரக் களத்தில் பேசிவருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று தேசிய தாத்தா பாட்டிகள் தினம் பல்வேறுநாடுகளில் கொண்டாடப்பட்டது. தன் தாத்தா பாட்டியுடனான தன் சிறுவயது நினைவுகளை கமலா ஹாரிஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த செய்தியில்``நான் சிறுமியாக இருந்தபோது, இந்தியாவில் இருந்த என் தாத்தா பாட்டியை காணச் சென்றிருக்கிறேன். இந்திய சுதந்திரப்போருக்கான இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்து செயல்பட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தான் என் தாத்தா. என்னை காலை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் சமத்துவம், ஊழலுக்கு எதிராக போராடுதல் குறித்தெல்லாம் பேசுவார்.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து பெண்களிடம் பேசுவதற்காக, என் பாட்டி கையில் ஒலிபெருக்கியுடன் இந்தியா முழுவதும் பயணம் செய்தவர். அவர்களின் பொது சேவைக்கான அர்ப்பணிப்பும், சிறந்த எதிர்காலத்திற்காக போராடும் குணமும் இன்றும் எனக்குள் வாழ்கிறது. அடுத்த தலைமுறையை வடிவமைக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் உதவும் அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் தேசிய தாத்தா,பாட்டி தின வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *