நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்!

- Muthu Kumar
- 01 Feb, 2025
நித்யானந்தா கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக தகவல்கள் கிடைத்த நிலையில் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகம் கர்நாடகாவின் பல்வேறு மாநிலங்களிலும் மடங்களை தொடங்கி செல்வ செழிப்புடன் இருந்தவர் நித்தியானந்தா. இவர் பாலியல் புகாரில் சிக்கியதன் மூலம் அறியப்பட்டார்.
மற்ற மடங்களின் சொத்துகளை அபகரிப்பது, பாலியல் புகாரில் சிக்குவது என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததை அடுத்து நித்தியானந்தாவை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என அஞ்சிய நித்யானந்தா திடீரென நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில்தான் அவர் தனியாக நாடு ஒன்றை உருவாக்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டதாகவும் அறிவித்தார்.
அவ்வப்போது இணையதளங்களில் வீடியோ மூலம் நித்தியானந்தா தோன்றி சத்சங்கங்களை நிகழ்த்தி வந்தார். இந்த நாட்டிற்கான கரன்சியை உருவாக்கினார். அது போல் பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவைகளையும் அவர் உருவாக்கியிருந்தார்.
அது போல் தங்கள் நாட்டிற்கு வாணிபம் செய்ய தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்படியும் மதுரையில் பரோட்டா கடை நடத்தி வந்தவர், விண்ணப்பித்திருந்தார். எனினும் கைலாசா எங்கிருக்கிறது என தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் குருபூர்ணிமா தினத்தில் கைலாசா எங்கு உள்ளது என்பதை அறிவிப்பேன் என நித்தி தெரிவித்திருந்தார். மேலும் தனது நாட்டில் அனைவருக்கும் சமமான கல்வி, மருத்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, கரீபியன் தீவு, பசிபிக், தென் அமெரிக்கா உள்ளிட்ட 7 இடங்களில் கைலாசாவுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கைலாசா எந்த நாட்டில் இருக்கிறது என்பதை நேரடியாக சொல்லாமல் நித்தியானந்தா குழப்பியதுபோல் தெரிவித்திருந்தார். மேலும் சில இடங்களையும் வருங்காலத்தில் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் மூலம் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது நித்தியானந்தாவின் மடங்களுக்கு தக்கார் ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தன் வாதத்தில், நித்தியானந்தா இந்தியாவில் இல்லை. இந்தியாவில் இல்லாத ஒருவர் எப்படி வழக்குத் தொடர முடியும்? அவர் தென் அமெரிக்காவில் ஈக்குவடாரில் வசித்து வருகிறார் என தெரிவித்துள்ளது.
எனவே நித்தியானந்தா ஈக்குவடாரில் இருக்கிறார் என்றால் கைலாசா என்ற நாட்டின் பெயரை திசை திருப்ப பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை நித்தியானந்தாவின் இடம் தெரியவந்துவிட்டதால் இனி அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *