என்னைக் குறித்த புகாருக்கு தமிழகம் வந்து பதில் சொல்வதே சரி-மகா விஷ்ணு இன்று தமிழ்நாடு வருகை!

top-news
FREE WEBSITE AD

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு. அதாவது முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

மேலும், இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரேமாதிரி படைத்திருக்க வேண்டும். கோடீஸ்வரன், ஏழை, நல்லவன், கிரிமினல், ஹீரோ, வில்லன் ஏன் இத்தனை மாற்றங்கள் இருக்க வேண்டும். போன ஜென்மத்தில் செய்யும் பாவ, புண்ணியம் தான் இப்போதைய நமது வாழ்க்கை என மாணவர்கள் முன் உரையாற்றியுள்ளார். அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியரான சங்கர் மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்றும், அவரை இப்படி பேச அனுமதித்தது யார் என்றும் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் அரசுப் பள்ளிகளில் ஆன்மிக சர்ச்சை தொடர்பான நிகழ்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி விளக்கம் அளித்தார்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாற்றுத்திறனாளி ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்த மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், மகா விஷ்ணுவை கேள்வி கேட்ட பார்வை குறைபாடு தமிழாசிரியர் சங்கருக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இன்னொரு பக்கம் மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் தன் மீதான சர்ச்சை குறித்து காணொளி வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார் மகா விஷ்ணு. ஆஸ்திரேலியாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ள அவர் இன்று சென்னை திரும்புவதாகவும், வந்ததும் விளக்கம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். "நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. என்னைப் பற்றி ஊடகங்களிலும் செய்திகளிலும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. அதில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போது நான் ஆஸ்திரேலியாவில் உள்ளேன். இங்கிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டும், ஆனால், நான் அங்கு போகாமல் சென்னைக்கே வருகிறேன்.

ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்களா அல்லது பதிவு செய்யப் போகிறார்களா என தெரியவில்லை. மேலும் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள எனது இல்லத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களது வேலையை காவல்துறையினர் சரியாகச் செய்கிறார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. அதேநேரம் எனது விளக்கத்தை அளிக்கும் கடமை எனக்கு இருக்கிறது.

எனவே இன்று 7ம் தேதி மதியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறேன். காவல்துறையினர் மீதும் இந்தியச் சட்டங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். அதன் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையிலும் காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் நேரில் சென்று விளக்கம் அளிப்பேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதையும் பார்க்க முடிந்தது. அவரது கோபத்தையும், சீற்றத்தையும் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு தெளிவு இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனால் எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சென்னையில் நான் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். என்னைக் குறித்து ஒரு புகார் வந்திருக்கிறது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தமிழகத்தில் இருக்க வேண்டும். அதுவே சரி" என அந்த காணொளி பேசியுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *