தமிழர்கள் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகிறார்கள் - சந்திரபாபு நாயுடு!

- Muthu Kumar
- 07 Mar, 2025
இந்தியாவில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு, தமிழ்நாட்டுக்கும் புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஒருவருடன் தொடர்புகொள்வதற்கு மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.
கூகுள் தலைமை அதிகாரிகூட ஒரு தமிழர்தான். தமிழ்நாட்டிலிருந்து பலரும் அமெரிக்கா செல்கின்றனர்; அவர்கள் ஆங்கிலம் கற்று மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர்; பிற சீனியர் பொறுப்புகளிலும், முதல் அல்லது இரண்டாம் இடங்களிலும் தமிழர்களே அதிகம் உள்ளனர்.
தமிழ்நாடு என்றாலே முன்பு இந்திய அளவில் சேவைத்துறையில் அதிகம் இருந்தார்கள்; இப்போது உலகம் முழுக்கச் சென்றுள்ளார்கள். காரணம் அவர்களின் திறமை. எனவே அறிவு வேறு; மொழி வேறு. மக்களுடன் எளிதில் பழகுவதற்கு இந்தியை கற்றுக் கொள்வது நல்லதுதான். ஆந்திரத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஐந்து முதல் பத்து மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். 5 முதல் 10 மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் உங்களுக்கான தேவை நிறுவனங்களிடம் அதிகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ள கருத்து, பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ள சூசகமான செய்தியாக பார்க்கப்படுகிறது. மும்மொழிக் கொள்கைக்கு மாற்றுபோல 10 மொழிக் கொள்கையை ஆந்திரா முன்னெடுக்கப் போகிறது என்று பேசியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்திலும் சரி, மும்மொழிக் கொள்கை விஷயத்திலும் சரி, தமிழ்நாட்டைப் போலவே பாதிக்கப்படும் இடத்தில்தான் ஆந்திரமும் இருக்கிறது. தவிர, தெலுங்கு தேசியவாதத்தை அடித்தளமாகக் கொண்டு உருவெடுத்தக் கட்சி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம்.
ஏற்கனவே தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் மக்கள்தொகை விவகாரம் சூடாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரைப் போலவே சந்திரபாபு நாயுடுவும் ஆந்திர மக்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பேசி வருகிறார்.
இத்தகைய சூழலில், மும்மொழிக் கொள்கை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில் நேரடியாக பிரதமரையோ மும்மொழிக் கொள்கையையோ சந்திரபாபு நாயுடு விமர்சிக்கவில்லை. ஆனால் அவருக்கே உரிய சூசக மொழியில் இருமொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை பேட்டியில் பேசியிருக்கிறார்.
ஆங்கிலத்தின் அவசியத்தையும் தாய்மொழியின் முக்கியத்துவத்தையும் விதந்தோதிய சந்திரபாபு நாயுடு, சற்றே குதர்க்கமான மொழியில் 10 மொழிக் கொள்கையைக்கூட முன்னெடுக்கலாம் என சொல்லியிருப்பது பாஜக கூட்டணிக்கு ஆந்திராவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *