இளைஞர் கடல் பயணத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் மற்றும் இரு இந்திய இளைஞர்கள்!
- Muthu Kumar
- 08 Oct, 2024
கோலாலம்பூர், அக். 8-
இளைஞர்களின் உருமாற்றத்தை கருத்தில்கொண்டு மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆண்டுதோறும் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, தாயகத்தின் பாரம்பரியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றுடன் வரலாற்றுச் சிறப்பு பரிமாற்றத்திற்காக, அரசாங்கத்தின் முழுச் சலுகையில் பல்லின இளைஞர்கள், இந்தோனேசியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமைச்சு வகுத்துள்ள திட்டங்களில் ஒன்றான தென்கிழக்காசியா, ஜப்பான் இளைஞர் கடல் பயணத் திட்டத்தில் இம்முறை ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உட்பட பட இரு இந்திய இளைஞர்கள் தேர்வாகியுள்ளனர்.இத்திட்டத்தில் பத்து ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அடுத்த மாதம் குரூஸ் எனப்படும் சொகுசுக் கப்பலின் மூலமாக ஜப்பான் நாட்டு இளைஞர்களை சந்திக்கவிருக்கின்றனர்.
மலேசியாவைப் பிரதிநிதிக்கும் 16 இளைஞர்களில், ஜொகூர் பாசிர் கூடாங் தமிழ்ப்பள்ளி ஆசிரியரான சரண் லோகநாதன், பேராக் பீடோரைச் சேர்ந்த சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாணவி தருஷினி பிரான்சிஸ் சேவியர் ஆகிய இருவர் தேர்வாகியுள்ளனர்.
"கடந்த 48 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆறுவிதமான கலந்தாலோசிப்புக் குழுவினர் பங்கேற்பர். அக்குழுவினரிடையே பல்வேறு கருத்து பரிமாற்றங்களும்இடம்பெறும். சில பிரதான தலைப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை இடம்பெறும். சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற அரிய பேராசிரியர்கள் அனைவரும் பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவர்," என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான ஆசிரியர் சரண் லோகநாதன் தெரிவித்தார்.
”இத்திட்டத்தில் குறிப்பாக நட்பு பரிமாற்றம் முதன்மையாக இருக்கும். இதன்மூலமாக பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த சொகுசு கப்பல் பயணம் சிறந்த அனுபவத்தையும் எங்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று தருஷினி பிரான்சிஸ் சேவியர் தெரிவித்தார்.
இந்த 38 நாள் பயணத்தில் வியட்நாம், ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பங்கேற்கும் இளைஞர்கள் செல்லவிருக்கும் நிலையில் அங்குள்ள சில முக்கிய இடங்களுக்குச் சென்று அதன் தகவல்களைத் திரட்டுவதில் தாங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அதோடு, உலக இளைஞர்கள் மத்தியில் சிறந்த புரிந்துணர்வையும் ஒற்றுமை, அமைதி நிறைந்த சூழ்நிலையையும் ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *