நான் இருக்கும் காலம் வரை நான் தான் தலைவர்'- ராமதாஸ்!

- Muthu Kumar
- 12 Apr, 2025
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன்.
அன்புமணி இனி பாமக செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன்.இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது'' என தெரிவித்திருந்தார்.
முன்னதாக புதுச்சேரியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ராமதாசும், அன்புமணியும் ஒரே மேடையில் மோதல் போக்கில் பேசிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்புமணியின் தலைவர் பதவி திரும்பப் பெறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸின் முடிவுக்கு பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்' என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பிரச்சனைகளில் முதல் ஆளாக வந்து நிற்பவர் கவுரவ ஜி.கே.மணி. ஆனால் இதுவரை ஜி.கே.மணி ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வரவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் பாமக மூத்த நிர்வாகிகள் ராமதாஸிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது. வழக்கறிஞர் பாலு, பசுமைத்தாயகம் அருள், தர்மபுரி வெங்கடேசன் ஆகியோர் ராமதாஸை சந்தித்து இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் 'நான் இருக்கும் காலம் வரை நான் தான் தலைவர்' என ராமதாஸ் திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு வரப்போவதில்லை என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அன்புமணி ராமதாஸ் அப்பா ராமதாஸின் முடிவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *