வேப் விளம்பரத் தடை உத்தரவு கண்காணிப்புப் பணியில் ஊராட்சி மன்றங்கள் தீவிரம்!

- Muthu Kumar
- 23 May, 2025
ஷா ஆலம், மே 23-
வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் பொருள்கள் தொடர்பில் காட்சிக்கு வைக்கப்படும் அனைத்து விதமான விளம்பரங்களையும் பறிமுதல் செய்ய மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவை சிலாங்கூரிலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் அமல் செய்யும்.
வேப் தொடர்பான பொருள்களை விற்பனை செய்வதற்கு இதுவரை லைசென்ஸ் வெளியிடாத கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் நிலைப்பாட்டை மாநில அரசின் இந்த உத்தரவு பிரதிபலிக்கிறது என்று மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு இயக்குநர் நோர்பிஸா மாபிஷ் கூறினார்.
மின் சிகரெட் தொடர்பான பொருள்களை பிரபலப்படுத்தும், விளம்பரப்படுத்தும் மற்றும் ஏற்பாட்டு ஆதரவை வழங்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு ஏற்ப மாநில அரசின் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என அவர் கூறினார்.
இதனிடையே, வேப் தொடர்பான அனைத்து பதாகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட விளம்பங்களுக்கு எதிராக தமது தரப்பு தீவிர அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கோல லங்காட் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.சமுதாயத்தில் வேப் நடவடிக்கைகளின் தீவிரமான பரவலை தாங்கள் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர், இளம் தலைமுறையினர் மத்தியில் வேப் விற்பனையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு தாங்கள் முழு ஆதரவு தெரிவிப்பதாகச் கூறினார்.
இந்த மின் சிகரெட் தடை தொடர்பில் தாங்கள் விரைவில் விவாதம் ஒன்றை நடத்தவுள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக, பொது உறவு அதிகாரி முகமது பவுளி அஜிஸ் மாமுர் கூறினார்.டத்தோ பண்டார் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த கூட்டம் விரைவில் நடத்தப்படும் என அவர் கூறினார்.
வேப் தொடர்பான டிஜிட்டல் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்ட அனைத்து வடிவ விளம்பரங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மன்றங்களை மாநில அரசு அண்மையில் பணித்திருந்தது.
Kerajaan negeri Selangor mengarahkan semua majlis perbandaran melaksanakan larangan pengiklanan produk rokok elektronik (vape). Tindakan tegas diambil untuk membendung penjualan dan pengiklanan vape terutama dalam kalangan golongan muda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *