எடப்பாடி பழனிச்சாமியால் அதிர்ச்சியில் உறைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு!

top-news
FREE WEBSITE AD

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மீது நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.

ஆனால் அவரது அணியிலிருந்து சாரைசாரையாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இணைந்து வருவது பேசு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக சசிகலாவின் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் தஞ்சாவூரில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஐக்கியமாகி இருக்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்று கொண்டார்.

ஆனாலும் விவகாரம் முடிந்த பாடில்லை. தேர்தல்களில் அனைத்திலும் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என சில நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொண்டால் போதும் என பேசி வருகிறார். அதே நேரத்தில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்களும் அதிமுகவுக்கு வெளியேவும் உள்ளேயும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுகவிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட சசிகலா தான்தான் பொதுச் செயலாளர் எனக் கூறி தொண்டர்களை சந்தித்து வருகிறார். டிடிவி தினகரன் தனி கட்சியை ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் தான் தற்போது வரை இருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருக்கும் மூத்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருக்கும் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு பலனாக பல மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்த புகழேந்தி, ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் தனியாக ஒரு அணியை ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குழுவை ஆரம்பித்து பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு பலத்த பின்னடைவாக நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர்.

நேற்று சிறையில் இருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அதனை தொடர்ந்து சேலம் சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தஞ்சை பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அந்த நிர்வாகிகளில் நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ் தரப்பில் இருந்த பல முக்கிய முகங்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சம் புகுந்திருக்கும் நிலையில் இன்னும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் விரைவில் நல்ல செய்தி வரும் எனக் கூறி சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *