மலேசிய விமானத்தில் புகை பிடித்த நபர் - அதிர்ச்சியில் பயணிகள்!

top-news
FREE WEBSITE AD

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்டபோது விமானத்தில் பறந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி, திடீரென சிகரெட் எடுத்து பற்ற வைத்து புகைத்துள்ளார். 

இதை பார்த்து திடுக்கிட்ட பயணிகள் உடனே அலார்ட் செய்தனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்போம். 

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என்பது இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று. மிகவும் போக்குவரத்து நெருக்கடி உள்ள விமான நிலையமாக திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட ரெடியாகி கொண்டிருந்தது. மலேசிய விமானத்தில் 174 பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர். 

விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்குவதற்கு முன்பு பயணிகள் அனைவரும் 'சீட் பெல்ட்' அணியும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.. பின்னர் பயணிகள் 'சீட் பெல்ட்' அணிந்துவிட்டனரா? என விமான பணிப்பெண்கள் சரி பார்ப்பதற்காக வரிசையாக ஒவ்வொரு சீட்டாக போய் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதாகும் ஆறுமுகம் என்ற பயணி, விமானத்தில் புகை பிடித்துக்கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த விமானப் பணிப்பெண்கள், 'விமானத்துக்குள் புகை பிடிக்க அனுமதி கிடையாது. உடனடியாக சிகரெட்டை அணைக்க வேண்டும். பாதுகாப்பு சோதனையையும் மீறி எவ்வாறு விமானத்துக்குள் சிகரெட் எடுத்து வந்தார்?' என்றும் அவரிடம் விசாரித்துள்ளார்கள். 

மேலும் இது பற்றி விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் தெரிவித்தனர். அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. 

பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, புகைப்பிடித்துக்கொண்டிருந்த பயணி ஆறுமுகத்தை விமானத்தில் இருந்து கீழே இறக்கி அழைத்து சென்றனர். மேலும் பயணி ஆறுமுகத்தின் உடைமைகளும் கீழே இறக்கப்பட்டன. அத்துடன் ஆறுமுகத்தின் மலேசிய பயணமும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் 173 பயணிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த விமானம் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது. 

விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணி ஆறுமுகத்தை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆறுமுகம் வேலைக்காக மலேசியா செல்ல இருந்தது தெரியவந்தது. பாதுகாக்கப்பட்ட இடத்தில் தடையை மீறி புகை பிடித்தது, விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்..

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *