உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் கபில் சிவில் வெற்றி!

- Muthu Kumar
- 19 May, 2024
பாஜக அரசுக்கு எதிராக நீதிமன்றங்களிலும் தங்களின் போராட்டங்களை இந்தியா கூட்டணி கட்சியினர், ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். பல வழக்குகள் ஆளும் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக கருத்துக்கள் பரவி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் அத்தகைய தீர்ப்புகளுக்கு எதிராக தங்களின் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதில் முதன்மையானவர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்.
ஒன்றிய அரசு மாநிலங்கள் மீது தொடுக்கும் அதிகார வன்முறைக்கு எதிராக நீதிமன்றங்களில் தனது திறமைமிகு வாதங்கள் மூலம் நீதியை வென்றெடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் கபில் சிபல். அப்படி பல வழக்குகளில் ஒன்றிய அரசை அம்பலப்படுத்தியும் உள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு கபில் சிபல் வெற்றி பெற்றார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 1066 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதீப் ராய் 667 வாக்குகளும், தற்போதைய தலைவராக இருந்த ஆதிஷ் அகர்வால் 296 வாக்குகளும் பெற்றனர்.
பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் கபில் சிவில் போட்டுயிட்டது ஏன் என்ற கேள்விக்கு, அரசியல் சாசனத்தை காக்கும் கடமை தனக்கு இருப்பதால் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் வெற்றிப்பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல் , எங்கள் சித்தாந்தம் அரசியலமைப்பை பாதுகாப்பது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுதான். இந்த வெற்றி அரசியலமைப்பை பாதுகாக்கும் எங்கள் போராட்டத்தின் முதல் வெற்றியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். இது ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். பிரதமரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானல், இது வெறும் டிரெய்லர்தான். இந்த ஆட்சிக்கு தாளம் போட்டவர்கள் விரைவில் அதிர்ச்சி அடைவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *