பப்புவா நியூ கினியா நிலச்சரிவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 670 ஆக அதிகரிப்பு!
- Muthu Kumar
- 26 May, 2024
தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் வரலாறு காணாத மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 670ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை தொடர்பான விவரத்தை ஐ.நா.வின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) வெளியிட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டில் இயங்கி வரும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக், இதுகுறித்து கூறுகையில் - வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்துள்ளன என யம்பலி கிராமம் மற்றும் எங்க மாகாண அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக, 60 வீடுகள் புதைந்ததாக கணக்கிடப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், தற்போது 670க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கு அடியில் புதைந்திருப்பதாக மதிப்பிட்டுள்ளார்கள். நிலப்பகுதி இன்னும் சரிந்து வருவதால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தண்ணீரும் அந்த பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிறது, இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்றார்.
100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பத்தில் அதாவது நேற்று முன்தினம் உள்ளூர் அதிகாரிகள் கணக்கிட்டிருந்தனர். இன்று வரை, ஐந்து உடல்கள் மற்றும் ஆறாவது ஒருவரின் கால் மட்டுமே மீட்கப்பட்டது. அதே நேரத்தில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், நிலச்சரிவில் இருந்து தப்பியவர்களை அவசரகால உதவியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். ஆனால், நிலையற்று இருக்கும் நிலப்பகுதியும் உள்ளூர் பழங்குடியின மக்களும் மீட்பு பணிகளுக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளனர்.
கேர் என்ற ஆஸ்திரேலியா மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதி ஜஸ்டின் மக்மஹோன், இதுகுறித்து கூறுகையில், சேதம் ஏற்பட்ட அப்பகுதிக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குச் செல்வதை மேலும் கடினமாக்கி உள்ளது என்றார்.
நிலப்பகுதி மிகவும் நிலையற்று இருக்கிறது. உள்ளே செல்வது மீட்புப் பணியாளர்களுக்கு கடினமாக உள்ளது. பிரதான சாலையும் சுமார் 200 மீட்டர்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நிவாரணங்கள் எடுத்து செல்வதில் இடையூறாக உள்ளது" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *