அடுத்தாண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள்- இளவரசர் துங்கு இஸ்மாயில்!
- Muthu Kumar
- 08 Oct, 2024
கோலாலம்பூர், அக். 8-
அடுத்தாண்டு தொடங்கி மீண்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை வார இறுதி விடுமுறை நாட்களாக அறிவிக்க ஜொகூர் முடிவு செய்துள்ளது என்று அம்மாநில பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.இம்முடிவுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இசைவு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மீது மாநில இஸ்லாமிய சமய மன்றத்தின் கருத்துகளும் பெறப்பட்டன என்று துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தும்படியும் ஒவ்வோர் அம்சத்தையும் ஆராயும்படியும் ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபீஸ் காஸி மற்றும் ஜொகூர் முப்தி (சட்ட அறிஞர்) ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறினார். தனியார்துறையும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இதர தரப்புகளும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்காக முஸ்லிம் தொழிலாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்குமென்று நம்புகிறேன் எனவும் தமது முகநூல் பதிவில் துங்கு இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு முக்கியமான நாளாக இருப்பதாலும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சமயம் இஸ்லாம் என்பதாலும் அதற்கு மதிப்பளிப்பதற்காக கடந்த 2014ஆம் ஆண்டில் வெள்ளிக்கிழமையையும், சனிக்கிழமையையும் வாரஇறுதி விடுமுறை நாட்களாக சுல்தான் இப்ராஹிம் அறிவித்தார். ஜொகூர் மாநிலம் கூட்டரசில் இணையாமல் இருந்த காலத்திலிருந்தே வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் விடுமுறை நாட்களாக இருந்து வந்தன. அந்த நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என்று சுல்தான் இப்ராஹிம் அப்போது விளக்கியிருந்தார்.
கடந்த 1994ஆம் ஆண்டில் முஹிடின் யாசின் மந்திரி பெசாராக இருந்த வேளையில் சனியும் ஞாயிறும் வார இறுதி விடுமுறை நாட்களாக மாற்றப்பட்டன. விரிவான ஆய்வுக்குப் பிறகு வார இறுதி ஓய்வு நாட்களை மாற்ற மாநில அரசு பரிசீலித்து வருகிறது என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஜூனில் ஓன் ஹஃபீஸ் அறிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *