14 நாடுகளின் விசாக்களுக்கு சவூதி அரேபியா தற்காலிகத் தடை!

- Muthu Kumar
- 08 Apr, 2025
ரியாத். ஏப். 8-
2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான விசாக்களுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்து உள்ளது.
இதன்படி இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், எகிப்து. இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன், மொரோக்கோ ஆகிய நாடுகளை சேர்ந்த ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவில் 2024ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரையின்போது, 1,200 யாத்ரீகர்கள் பலியானார்கள். அதிக மக்கள் நெருக்கடியால், வெப்பம் அதிகரித்தது இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இந்தத் தடையானது. மக்காவுக்கான ஹஜ் புனித யாத்திரை நிறைவு பெறும் ஜூன் மாதத்தின் பாதி வரை நடைமுறையில் இருக்கும்.
வெளிநாட்டினர் பலரும் உம்ரா விசாக்கள் அல்லது வருகைக்கான விசாக்களுடன் கடந்த காலங்களில் சவூதி அரேபியாவுக்குள் நுழைந்து, அதிகாரப்பூர்வ அங்கீகாரமின்றி கூடுதலான நாட்கள் தங்கி, சட்டவிரோத வகையில் ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.
இதுபோன்று முறையான பதிவு செய்யாமல் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் தனி நபர்களை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத வேலைவாய்ப்பில் ஈடுபடும் செயலை தவிர்ப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களை ஒதுக்கீட்டு முறையில் சவூதி அரேபியா அனுமதிக்கும் வழக்கம் கொண்டுள்ளது.
விதிகளை மீறக் கூடிய நபர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் வருங்காலத்தில் 5 ஆண்டுகள் தடையை எதிர்கொள்வார்கள் என்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், விசாக்களை வைத்திருக்கும் தனிநபர்கள் வருகிற 13ஆம் தேதி வரை சவூதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *