த.வெ.க தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அதிகாரப்பூர்வமாக அமலானது!

- Muthu Kumar
- 05 Apr, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு நேற்று (03-04-2025) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்திய பின்னர், இந்த பாதுகாப்பு நடவடிக்கை அமலுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டது. இதில் பயிற்சி பெற்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், தமிழ்நாட்டிற்குள் மட்டும் இந்த பாதுகாப்பு பிரிவு விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் என செய்திகள் வெளியாகி இருந்தது.
விஜய்யின் தரப்பிலிருந்து 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கோரப்பட்ட நிலையில், இதற்கான முதல்கட்ட ஆலோசனை ஏற்கனவே அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விஜய் அடிக்கடி செல்லும் இடங்கள், படப்பிடிப்பு தளங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் அவர் பயணிக்கும் நேரங்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விவரங்களை சேகரித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆலோசனையில், பாதுகாப்பு அதிகாரிகள் தங்குவதற்கான இடம் மற்றும் விஜய்யின் பயண விவரங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.
தற்போது, 'ஒய்' பிரிவைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி விஜய்யின் இல்லத்தில் பாதுகாப்பு பணியை தொடங்கி உள்ளார். அடுத்த ஓரிரு நாட்களில் முழுமையான 'ஒய்' பிரிவு பாதுகப்பு வழங்கப்படும் என்று விஜய்யின் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர், பாதுகாப்பு தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, இந்த பாதுகாப்பு முடிவு எடுக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *