கிரகத்தில் பல மில்லியன் டன் அளவில் வைரம் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள்!
- Muthu Kumar
- 23 Jul, 2024
மனிதர்கள் வாழும் இந்த பூமியில் நாம் உயிர் வாழத் தேவையான அத்தனையும் இருக்கிறது. ஆடம்பரமாக வாழத் தேவையான பொருட்களும் கிடைக்கின்றன.
இருப்பினும், பூமியை போன்று ஒரு கிரகம் இருக்கிறதா? அதில் மனிதனைப் போல வேறு யாரும் வாழ்கின்றனரா? என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், மனிதர்கள் வேறு கிரகத்தில் சென்று வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிலவு, செவ்வாய் போன்றவற்றை ஆய்வு செய்துள்ள விஞ்ஞானிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது சூரிய குடும்பத்தில் 7 மற்றும் 8-வது கிரகமாக இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் வைரம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இருப்பினும், அது மிகவும் தொலைவில் இருக்கும் நிலையில், அதை விட நமக்கு மிக அருகில் இருக்கும் மற்றொரு கிரகத்தில் பல மில்லியன் டன் அளவில் வைரம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
அதாவது, சூரிய குடும்பத்தில் முதலாவதாக இருக்கும் புதன் கிரகம் கருப்பு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. புதனின் காந்தப்புலம் பூமியை விட மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. இந்த கிரகம் கருப்பாக இருப்பதற்கு, அதில் இருக்கும் கிராஃபைட் தான் காரணம். பெல்ஜியம் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், இவை அனைத்தும் உருகிய வடிவிலேயே இருப்பதாகவும், அவை புதன் கிரகம் முழுவதிலும் கடலைப் போல காட்சியளிப்பதாகவும் ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதன் கிரகத்தின் மேல்தட்டு சுமார் 80 கி.மீ., ஆழமாக இருக்கலாம் என்றும், அதீத வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல் தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன் படிவங்கள் வைரக் கட்டிகளாக மாறியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அதுவும் அந்த வைர படிவத்தின் தடிமன் 15 கி.மீ., இருக்கும் என்றும் கணித்துள்ளனர். ஆனால், இந்த வைரங்களை வெட்டி எடுப்பதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில், புதனின் மேற்பரப்பில் இருந்து பல கிலோ மீட்டர் ஆழத்தில் வைரப் படிவங்கள் இருப்பதால், அதை மனிதர்களால் பயன்படுத்த முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *