நடிகர் விஜய் CBSE பள்ளி நடத்துகிற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்- அண்ணாமலை பரபரப்பு!

- Muthu Kumar
- 19 Feb, 2025
நடிகர் விஜய் CBSE பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டியில் தமிழக பாஜவை பொறுத்தவரையும், பிரதமர் மோடியை பொறுத்தவரையும் தெள்ளத்தெளிவாக இருக்கிறோம்.
எங்கேயும் இந்தி திணிக்கப்படவில்லை. இந்தியை எங்கேயும் யாரும் திணிக்க மாட்டார்கள். மும்மொழி கொள்கை என்றால் இந்தி என்ற தவறான பிரசாரத்தை வைக்கிறார்கள். விருப்ப மொழியாக இந்தி அல்லது பிற மொழி பயிலலாம் என 2018-ல் சீமானே கூறி இருந்தார்.
இப்போது எத்தனை பேருக்கு தெரியும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்று. பதூர் என்ற இடத்தில் அந்த பள்ளி இயங்குகிறது. அந்த பள்ளியின் பெயர் விஜய் வித்யாஸ்ரம். சி.ஜோசப் விஜய் என்பவர் யார். அவர் புதிதாக மேலே இருந்து வந்தாரா?. அவர் இடத்தை 35 ஆண்டுகள், 2017ம் ஆண்டில் இருந்து 2052ம் ஆண்டு வரை, ஒரு அறக்கட்டளைக்கு 35 ஆண்டுக்கு லீஸ் கொடுக்கிறார். அந்த அறக்கட்டளை யார் பெயரில் பதிவு ஆகியிருக்கிறது என்றால், எஸ்.ஏ.சந்திரசேகர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தக்கூடிய பள்ளிதான் விஜய் வித்யாஸ்ரம். அவங்க நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கிறது. அவர்கள் சொந்த குழந்தைகள் பிரெஞ்சு படிக்கிறார்கள். இவர்கள் வெளியே வந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் இரண்டு மொழியில் படிக்க வேண்டும் என்று எந்த லட்சணத்தில் சொல்கிறார்கள். விஜய்யாக இருக்கட்டும், சீமானாக இருக்கட்டும். 30 லட்சம் பேர் தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையில் படிக்கிறார்கள்.
பிரதமர் மோடி சொல்வது மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழி ஒரு பேப்பர். மலையாளம் எடுக்கிறீங்களா ஒரு பேப்பர் கூட வரும். உருது எடுத்தால் உருது வரும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் குறித்து அன்பில் மகேஷ் கடிதம் எழுதுவாரா?. அப்படி அன்பில் மகேஷ் எழுதினால், அன்று மாலையே மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து அதுபற்றி பேச நான் தயார்.
தமிழக பாஜக சார்பில் மார்ச் 1ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளது. வீடு, வீடாக சென்று 3வது மொழி தொடர்பாக விவரங்களை சேகரிப்போம். 3வது மொழி வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். விருப்ப மொழி குறித்து கருத்து கேட்டு ஜனாதிபதிக்கு விவரங்களை நேரடியாக கொடுக்க உள்ளோம். கையெழுத்து இயக்கத்திற்கான குழு விரைவில் அமைக்கப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *