தவெக தலைவர் விஜய், மக்களை சந்திப்பது வரவேற்கக்கூடியது- திருமாவளவன்!

- Muthu Kumar
- 24 Jan, 2025
மதுரையை அடுத்த அரிட்டாபட்டி மற்றும் நாயக்கர் பட்டியில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்கத்தை மத்திய அரசு ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.
இதனால், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து போராடிய அப்பகுதி மக்கள் நேற்று பட்டாசுகளை வெடித்து, நடனம் ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், டங்ஸ்டன் விவகாரம் போலவும், சென்னையை அடுத்த பரந்தூரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது பகுதிகளில் விமான நிலையம் அமையக்கூடாது என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் டங்ஸ்டன் விவகாரம் மற்றும் பரந்தூர் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பரந்தூர் விமான நிலையம் வேறு-அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் விவகாரம் வேறு! டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட இருந்த நிலப்பரப்பு என்பது தமிழ்நாடு அரசால் பல்லுயிர் பாரம்பரியப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட பகுதி. அங்கு சுரங்கம் தோண்டுவது ஏற்புடையது அல்ல என்ற அடிப்படையில் இந்த நிலைபாடு எடுக்கப்பட்டது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மக்கள் விடுத்துள்ள கோரிக்கையில் விவசாயம் பாதிக்கப்படக்கூடாது.
காலம் காலமாக வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள் புலம் பெயர்வதால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கோரிக்கைகளும் வேறு வேறானவை. பரந்தூர் மக்களின் கோரிக்கை கூட இந்த பகுதிகளில் விமான நிலையம் வரக்கூடாது என்பது அல்ல. அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அந்த பகுதியில் விமான நிலையம் அமைத்து கொள்ளுங்கள் என்றே சொல்கிறார்கள்.
அந்தவகையில், நாங்களும் பொதுமக்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம். ஆனால், இந்த செயல்திட்டத்திற்கான அனைத்து பணிகளும் திட்டமிடப்பட்டு விட்டதாக தெரிகிறது. எனவே, இனிமேல் அது தடுத்து நிறுத்தப்படுமா என்பது தெரியவில்லை. " என்றார்.
தவெக தலைவர் விஜய் வேங்கை வயல் மக்களை சந்திக்க போவதாக கிளம்பும் தகவல் குறித்து பேசிய திருமாவளவன், "ரொம்ப மகிழ்ச்சி! பாதிக்கப்பட்ட மக்களை அதுவும் குறிப்பாக தலித் மக்களை சென்று சந்திப்பது மகிழ்ச்சியானது, வரவேற்கத்தக்கது. தலித் மக்கள் பொதுவாக பாதிக்கப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் கேள்வி கேட்பது மரபு ஆகிவிட்டது. இதற்கு, அனைத்து கட்சிகளை சார்ந்தவர்களும் கேள்வி கேட்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது அதிமுக என்ன செய்தது, திமுக என்ன செய்தது என்பதை யாரும் கேட்பதில்லை. விடுதலை சிறுத்தைகள் எங்கே போனது என்ற கேள்வி, ஒரு சார்பு மக்களுக்கான கட்சி என்பதுபோல் ஆகிவிடுகிறது. இன்றைக்கு தவெக தலைவர் விஜய், அந்த பகுதிக்கு செல்வது மக்களை சந்திப்பது வரவேற்கக்கூடியது. " என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *