ஏமன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு!

top-news
FREE WEBSITE AD

ஏமன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷாவுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றுவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). செவிலியரான இவர் 2008 ஆம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். இதன் பின்னர் அந்த நாட்டைச் சேர்ந்த தளால் அப்தோ மஹதி (வயது 37) என்பவருடன் இணைந்து சொந்தமாக மருத்துவமனை ஒன்றை கட்டினார். இவர்களுக்குள் தொழில் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டது. செவிலியர் நிமிஷா இந்தியாவிற்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரது பாஸ்போர்ட் மற்றும் பணத்தை மஹதி திருடியதாக சொல்லப்படுகிறது.

இதனால் 2017 ஆம் ஆண்டு தனது தொழில் கூட்டாளியான மஹதியிடம் இருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்பதற்காக அவருக்கு போதை மருந்துகளை நிமிஷா கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் நிமிஷாவால் அதீத போதை மருந்து கொடுத்ததால் மஹதி உயிரிழந்திருக்கிறார்.

இந்த கொலை வழக்கில், ஏமன் நீதிமன்றத்தால் செவிலியர் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏமனின் உச்சபட்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது. நர்ஸ் நிமிஷாவிற்கு இன்று (ஜூலை 16 - புதன்கிழமை) மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு அறிவித்தது.

ஆனால் அவரது மரண தண்டனையை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் பலனில்லாமல் போனது. இறுதி வாய்ப்பாக, ஷரியா சட்டப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் Blood Money எனப்படும் நஷ்ட ஈடு பணத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிமிஷா தலை மீது தொங்கும் கத்தி அகலும் என்ற நிலை உள்ளது. நிமிஷாவின் குடும்பத்தினர் சுமார் 8 கோடி ரூபாய் வரை Blood Money தருவதாக மஹதியின் குடும்பத்தினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துவதற்கான முயற்சிகளில், இந்தியாவின் சன்னி இஸ்லாமியப் பிரிவு மதத் தலைவரான காந்தாபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் அறிவுறுத்தலின்பேரில், சுபி அறிஞரான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காந்தாபுரம் ஏபி அபூபக்கர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.
அதன்படி ஏமனில் உள்ள தாமர் நகரில் ஷேக் ஹபீப் உமர் மற்றும் நிமிஷாவால் கொல்லப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினர் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

மஹ்தியின் குடும்பத்தினர் இதுவரை யாருடனும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்து வந்த நிலையில் முதல் முறையாக இப்படி ஒரு பேச்சுவார்த்தைக்கு அவர்கள் ஒத்துக் கொண்டிருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் தான் செவிலியர் நிமிஷாவிற்கு இன்று நிறைவேற்றப்படுவதாக இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் மூலமாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் நிமிஷா விடுவிக்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்படுவார் என கருதக்கூடாது.

மஹ்தியின் குடும்பத்தினர் Blood Money-யை ஏற்கும்பட்சத்தில் மட்டுமே நிமிஷாவின் தலை தப்பியது என நம்பலாம். பேச்சுவார்த்தைக்காக ஒரு நாள் மட்டும் அவரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஒரு அறிக்கையும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய இயலவில்லை.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *