திருச்சி சிவா பேச்சால் சீமான் ஆவேசம்- காமராஜர் பேரன் நான் இருக்கேன்!

top-news
FREE WEBSITE AD

காமராஜர், தமிழ்நாட்டை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் என கருணாநிதியிடம் கூறியதாக திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது பற்றிய கேள்விக்கு, "காமராஜர் உயிருடன் இல்லையே..அதனால் சொல்கிறார்கள்." என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, "கருணாநிதி என் 23, 24 வயதின்போது என்னை காரில் அழைத்துச் செல்வார். அப்போது என்னிடம் பழைய நிகழ்வுகளை சொல்வார். சிலர் சின்னப்பையனிடம் எதற்கு இதை எல்லாம் சொல்கிறார் என நினைப்பார்கள். ஆனால், அதனை நான் மேடையில் சொல்வேன் என கருணாநிதிக்கு தெரியும்.

ஒருநாள் மின்சாரத் தட்டுப்பாடு குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டன கூட்டம் போடுகிறார். காமராஜருக்கு 'ஏசி' இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து அரசு சுற்றுலா மாளிகை விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார். தன்னை எதிர்த்து பேசினாலும், அவரது உடல்நிலையை கருதி நான் உத்தரவிட்டேன் என்றும் கருணாநிதி கூறினார்.

அதேபோல், எமர்ஜென்சி காலத்தில் காமராஜரை கைது செய்ய துடித்தார்கள். தமிழகத்தில் அது முடியவில்லை. அந்த சமயத்தில் திருப்பதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக செல்கிறார். அப்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்து 'தயவு செய்து நீங்கள் திருப்பதி செல்ல வேண்டாம்' என தகவல் போகிறது. இதற்கு, 'நான் திமுககாரன் இல்லை, காங்கிரஸ்காரன். என்னை போக வேண்டாம் என சொல்ல இவர் யார்' என்றார் காமராஜர்.

அதற்கு பதில் அளித்த கருணாநிதி, 'நான் திமுக தலைவர் அல்ல, தமிழகத்தின் முதல்வர். இது என் உத்தரவு' என்றார். 'நான் நாற்காலியே வேண்டாம் என சொல்லிவிட்டு வந்தவன். எனக்கு உத்தரவு போட இவர் யார், இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா' எனக் கேட்டார். உடனே ராஜாராம் நாயுடுவை கூப்பிட்ட கருணாநிதி, 'அவரை புரிந்துகொள்ள சொல்லுங்கள். அவருக்கு உத்தரவுபோடும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை. ஆனால், அவரை கைது செய்ய மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்குள் இருக்கும் வரை நான் பாதுகாப்பேன். அதைத்தாண்டி, ஆந்திராவின் திருப்பதி சென்றால் என்னால் காப்பாற்ற முடியாது. எனவே தயவு போக வேண்டாம் என சொல்லுங்கள்' என்றார். அதன்பிறகே புரிந்துகொண்ட காமராஜர், இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு எனக்கூறி, கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உயிர் போவதற்கு முன்பு, ''நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்'' என்றாராம்." இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

திருச்சி சிவா, காமராஜர் பற்றி இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் திருச்சி சிவா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த காமராஜர், தமிழ்நாட்டை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் என கருணாநிதியிடம் கூறியதாக, மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது பற்றிய கேள்விக்கு, "காமராஜர் உயிருடன் இல்லையே.. அதனால் சொல்கிறார்கள். அவர் என்றைக்கு அவ்வாறு சொன்னார்? திமுகவுக்கு ஓட்டு போடுவதும் திருட்டுப்பயல்களை வீட்டுக்கு கூப்பிடுவதும் ஒன்றுதான் எனப் பேசியவர் காமராஜர். ஒரு தலைவன் இல்லையென்றால் என்ன வேண்டுமென்றாலும் பேசலாமா? நான் அவரது பேரன் இருக்கிறேன் " என ஆவேசமாகப் பேசியுள்ளார் சீமான்.

மேலும் பேசிய சீமான், "தமிழ்நாடு எதற்காக ஓரணியில் திரள வேண்டும்? இந்தி திணிப்பை எதிர்க்கவா? அல்லது வடவர் ஆதிக்கத்தை தடுக்கவா? திராவிட கட்சிகள் செய்தி அரசியலை மட்டும்தான் செய்யும். சேவை அரசியலையோ செயல் அரசியலையோ செய்யாது. அது அக்கட்சிகளுக்கு தெரியாது.

விவசாயிகள், ஆசிரியர்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், திமுகவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வதாக கூறுகிறார்கள். திமுக ஆட்சியில் 'சமூக நீதி' என்பது கட்டடத்தில் மட்டும்தான் இருக்கிறது. பாசிச பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து திமுக அரசு எந்த விதத்திலும் மாறுபடவில்லை.

இந்தியா கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதில்லை. 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி' எனக் கூறியவர்கள், தற்போது 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் குடும்ப ஆட்சி' என்கிற நிலையில் இருக்கிறார்கள். ஒரு கோடி நபர்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளதாக கூறும் திமுக, வாக்குக்கு காசு கொடுக்காமல் இருக்குமா?" என்று கேள்வி எழுப்பினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *