டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவேல் துரோவின் உயிரியல் தந்தை சாதனை!
- Muthu Kumar
- 31 Jul, 2024
டெலிகிராமின் இணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான பாவேல் துரோவுக்கு தற்போது 39 வயது ஆகிறது.
ஆனால், அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் உயிரியல் தந்தையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையில்லாமல் தனது நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும், அவரது வேண்டுகோளை ஏற்று முதன்முறையாக விந்தணுவை தானமாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார். முதல்முறை விந்தணு தானம் கொடுத்தபோது கடும் தயக்கம் இருந்ததாகவும், ஆனால், தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு விந்தணு தானம் கொடுப்பது சமூக கடமை என்றும் மருத்துவர்கள் கூறியதாகவும் பாவேல் துரோவ் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக விந்தணு தானம் செய்து வந்ததாகவும், அதன்மூலம் இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடைத்திருப்பதாகவும் பாவேல் துரோவ் கூறியுள்ளார்.
இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பே விந்தணு தானம் கொடுப்பதை தான் நிறுத்திவிட்டதாகவும், ஆனால் ஐவிஎஃப் மருத்துவமனையில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் தனது விந்தணுக்கள் மூலம் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும் என்றும் கூறியுள்ள பாவேல் துரோவ், இதேபோல பலரும் விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தனது உயிரியல் குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ள வசதியாக தனது டிஎன்ஏ விவரங்களை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெலிகிராமில் இந்த பதிவை 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். அதேபோல், இதன் ஸ்கிரீன் ஷாட் எக்ஸ் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. அதற்கு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *