கடைசி பனிப்பாறையையும் இழந்தது வெனிசுலா தேசம்!

top-news
FREE WEBSITE AD

வெனிசுலா தேசம் தனது கடைசி பனிப்பாறையையும் இழந்துவிட்டது. அந்த நாட்டின் ஆண்டிஸில் உள்ள சியரா நெவாடா டி மெரிடா மலைகளில் காணப்படும் ஹம்போல்ட் பனிப்பாறை மிகவும் சிறியதாக மாறிவிட்டது.

தற்போது ஐஸ்-ஃபீல்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 'லா கரோனா' என்றும் ஹம்போல்ட் பனிப்பாறை அறியப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இது நடந்துள்ளது. இதன் மூலம் அண்மைய கால வரலாற்றில் அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த முதல் நாடாகி உள்ளது வெனிசுலா. இந்த சூழலில் காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உடன்படிக்கையை பார்க்க விரும்புவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் ஊடாக உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்வதைக் கட்டுப்படுத்தவும், அது மேலும் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா தனது கடைசி பனிப்பாறையை இழந்தது குறித்து க்ரையோஸ்பியர் கிளைமேட் இனிஷியேட்டிவ் அமைப்பும் உறுதி செய்துள்ளது. தென் அமெரிக்க தேசத்தில் எஞ்சியிருக்கும் ஒரே பனிப்பாறையான ஹம்போல்ட் பனிப்பாறை, 'பனிப்பாறை என வகைப்படுத்த முடியாத அளவுக்கு சிறியதாகிவிட்டது' என எக்ஸ் தள பதிவில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சியரா நெவாடா டி மெரிடா மலைகளில் மொத்தம் 6 பனிப்பாறைகள் இருந்துள்ளன. அதில் ஐந்து பனிப்பாறைகள் கடந்த 2011-க்கு முன்பாகவே உருகிவிட்டன.

இந்த சூழலில் கடைசியாக நிலைத்திருந்த ஹம்போல்ட் பனிப்பாறை, மேலும் பத்து ஆண்டு காலம் வரை இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். இருந்தும் அவர்கள் கணிப்பை காட்டிலும் மிக வேகமாக அந்த பனிப்பாறை உருகி உள்ளது. தற்போது 2 ஹெக்டேருக்கும் குறைவான பரப்பளவில் அது சுருங்கிவிட்டது. அதன் காரணமாக பனிப்பாறை என்ற அடையாளத்தை அது இழந்துள்ளது.

கொலம்பியாவில் உள்ள லாஸ் ஆண்டிஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 450 ஹெக்டேர் என்ற பரப்பளவில் இருந்து 2 ஹெக்டேருக்கு அந்த பனிப்பாறை உருகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 10 ஹெக்டேர் என்ற அளவில் இருந்தால் மட்டுமே பனிப்பாறை என்ற அடையாளம் வழங்கப்படும் என அமெரிக்க புவியியல் அமைப்பு தனது ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஹம்போல்ட் பனிப்பாறையை காக்கும் வகையில் கடந்த டிசம்பரில் எஞ்சியுள்ள பனியை தெர்மல் போர்வையை கொண்டு மூடும் திட்டத்தை அறிவித்தது வெனிசுலா அரசு. அதற்கு உலக நாடுகள் மத்தியில் விமர்சன குரல் எழுந்தன. கார்பன் டை ஆக்ஸைடு (சிஓ2) உமிழ்வை குறைப்பதன் மூலம் உலகில் உள்ள பனிப்பாறைகளின் உருக்கத்தை சற்று தாமதப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *