இந்தியா - வங்கதேசம் எல்லையில் மீண்டும் பதற்றம்!

- Muthu Kumar
- 22 Dec, 2024
வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவர் இந்திய நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். இதனால் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே நல்ல உறவு என்பது இருந்தது. ஆனால் அந்த நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டார்.
அதன்பிறகு அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அரசின் தலைவரா நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் உள்ளார். இவர் பதவியேற்றதில் இருந்தே நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.
அதோடு வங்கதேசம் தொடர்ந்து இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது எல்லையில் வங்கதேசம் உளவு ட்ரோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது. அதாவது வங்கதேசம் தனது எல்லையை இந்தியாவுடன் தான் 94 சதவீதம் வரை பகிர்ந்துள்ளது. அதாவது இந்தியாவும் - வங்கதேசம் இடையே மொத்தம் 4,096 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லை பகுதி விரிந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்துடன் 2,217 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் பகிர்ந்துள்ளது. இதுதவிர வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசத்தின் எல்லை உள்ளது. அதாவது அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுடன் வங்கதேசம் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதில் முக்கியமான இடம் என்னவென்றால் 'கோழி கழுத்து' (Chicken Neck)பகுதியாகும்.
அதாவது இந்தியாவுடன் பிற பகுதிகளுடன் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் பகுதி தான் இந்த கோழி கழுத்து பகுதியாகும். இது மேற்கு வங்கத்தின் சிலிகுரி காரிடாரில் உள்ளது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் வடகிழக்கு மாநிலங்களை மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுடன் இணைக்கும் இடம் தான் இந்த 'கோழி கழுத்து' பகுதி. மேப்பில் இந்த இடத்தை பார்த்தால் கோழியின் கழுத்து போல் இருக்கும். இதனால் இதற்கு கோழி கழுத்து பகுதி என்று பெயர் வந்துள்ளது.
இந்த கோழி கழுத்தின் ஒரு பகுதியில் தான் வங்கதேசத்தின் எல்லை உள்ளது. இந்த எல்லையில் தான் தற்போது வங்கதேசம் உளவு ட்ரோன்களை பயன்டுத்த தொடங்கி உள்ளது. அதாவது துருக்கி நாட்டின் தயாரிக்கப்பட்ட பல்வேறு நவீன வசதி கொண்ட Bayraktar TB2 வகை ட்ரோன்களை வைத்து வங்கதேசம் உளவு பார்க்க தொடங்கி உள்ளது.
இந்த ட்ரோன் என்பது துருக்கி நாட்டின் பய்கார் மகினா சனாயி வி டிகாரெட் எனும் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. இது துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறையை சேர்ந்த நிறுவனமானகும். இந்த ட்ரோன் MALE வகை அதாவது medium-altitude long-endurance வகையாகும். இந்த ட்ரோனனை ரிமோட் மூலம் இயக்குவதோடு, தன்னிச்சையாகவும் இயக்க முடியும். அதிகபட்சமாக 300 கிலோமீட்டர் சுற்றவில் 24 மணிநேரம் தொடர்ந்து பறக்க வைக்க முடியும்.
மேலும் இந்த ட்ரோன் என்பது அமெரிக்காவின் MQ - 9 ரிப்பர் ட்ரோனை விட 8 மடங்கு வரை எடை குறைவானதாகும். அதோடு மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. நவீன போர் முறை தாக்குதலான லேசர் வழிக்காட்டுதல் மூலம் ஏவுகணை நடத்தும் தாக்குதலை இது மேற்கொள்ளும் திறன் கொண்டது. ஏற்கனவே இந்த ட்ரோன் வகையை வைத்து பாகிஸ்தான் நமக்கு குடைச்சல் கொடுக்கும் நிலையில் தற்போது வங்கதேசமும் நம்மை சீண்டிப்பார்க்கிறது.
வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை தான் தற்போது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவும் அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது வங்கதேசம் ட்ரோன் மூலம் உளவு பார்க்கும் இடத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் உள்ள எல்லையில் மத்திய அரசும் ட்ரோன்களை குவித்து வருகிறது. இதனால் இந்தியா - வங்கதேசம் எல்லையில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *