மனம் தாங்காமல் மாஞ்சோலை எனும் சொர்க்கத்தை விட்டு கிளம்பிய மக்கள்!
- Muthu Kumar
- 16 Jun, 2024
மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் நேற்றைய தினம் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட போது அவர்கள் கோரஸாக அழுதுக் கொண்டே பாடிய பாடல் கல் நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது.
பரம்பரை பரம்பரையாக ஒரே தொழிலை செய்து வந்ததால் தங்களுக்கு வேலைவாய்ப்பையும் தங்குவதற்கு வீடையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி உருவாகிறது.இந்த இடத்தில் பசுமையான இடம் என்றால் அது மாஞ்சோலை பகுதியாகும். மணிமுத்தாறு அணையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் 3500 அடி உயரத்தில் இந்த மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த வனப்பகுதி சிங்கம்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்போது மும்பையை சேர்ந்த தி பாம்பே டிரேடிங் கார்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 1929 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை சுமார் 8000 ஏக்கர் பரப்பு கொண்ட மாஞ்சோலை வனப்பகுதியை ஜமீன் குத்தகைக்கு கொடுத்தார். இதையடுத்து கரடுமுரடாக கிடந்த மாஞ்சோலை மலைப்பகுதியை அந்த நிறுவனம் சீராக்கியது.
இதையடுத்து காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து கூலி வேலைகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களால் உருவானது தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியாகும். மாஞ்சோலை மட்டுமில்லாமல் அதற்கு மேல் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி என மொத்தம் ஐந்து இடங்களில் தேயிலை எஸ்டேட் அமைத்தது.
இந்த மாஞ்சோலையில் 6 மாதங்களுக்கு மழை பெய்யும், 6 மாதம் வெயில் இருக்கும். ஆண்டு முழுவதும் இங்கு குளிர்காலம் நிலவும். இந்த சீதோஷ்ண நிலையை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விரும்பினர். இங்கு சுமார் 2000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 450 கூலியாக வழங்கப்படுகிறது.
ஊதியம் குறைவாக இருந்தாலும் சுத்தமான காற்று, தண்ணீர், சூழல் அமைந்ததால் மன சஞ்சலம் இன்றி மக்கள் பணியாற்றி வந்தனர். சுமார் 5 தலைமுறைகளாக பணியாற்றி வருகிறார்கள். தற்போது வெறும் 536 பேர் மட்டும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜமீனுடன் போட்ட குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில் ஜமீன் நில ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதனால் மாஞ்சோலை பகுதி அரசு வசம் செல்லும் நிலை உள்ளது. குத்தகை காலம் முடியும் முன்னரே நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சித்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தை நாடியது. அப்போது குத்தகை காலம் முடியும் வரை மாஞ்சோலையில் தேயிலை தோட்டம் நடத்தவும் 2028ஆம் ஆண்டு முறைபடி அரசு நிலத்தை, கையகப்படுத்தி கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் குத்தகை காலம் முடியும் முன்னரே எஸ்டேட் தொழிலாளர்களை வெளியேற்ற அந்த நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கியது. அதற்கான பணப்பலன்களையும் கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. எஸ்டேட்டை விட்டு வெளியேற நேற்றுடன் கடைசி நாள் என்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு கடிதத்தில் கையெழுத்திட்டு அங்கிருந்து வெளியேறினர்.
பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வந்த எஸ்டேட்டை விட்டு அவர்கள் வெளியேறும் போது கதறி அழுதனர். எத்தனையோ முறை அட்டை பூச்சிகள் கடித்து ரத்தத்தை உறிஞ்சிய போதெல்லாம் அதையும் மறந்து பணியாற்றினோமே என கண்ணீர் விட்டனர். இனி வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்பதும் அவர்களின் கவலையாக இருந்தது.
ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து ஆறுதல் கூறியபடியே அந்த இடத்தை விட்டு வெளியேறினர். பின்னர் எஸ்டேட்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வேறு வேறு பகுதிகளை சேர்ந்தாலும் நல்லது, கெட்டதுகளில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த நிலையில் இந்த திடீர் பிரிவு அவர்களை உலுக்கியது.
அப்போது அவர்கள் பசுமை நிறைந்த நினைவுகளே, பாடி திரிந்த பறவைகளே, பழகி கழித்த தோழர்களே பறந்து செல்கிறோம்... என்ற பாடலை அனைவரும் நாதழுதழுக்க பாடினர். இந்த காணொளியை பார்க்கும் போது அவர்களின் பாச பிணைப்பை எண்ணி மனம் கலங்குகிறது. வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் வளர்ந்தது என்னவோ மாஞ்சோலை எனும் இயற்கையின் அன்னை மடியில்தானே! அதனால்தான் இவர்களால் அந்த பிரிவை தாங்கிக் கொள்ள இயலவில்லை. தமிழக அரசு தங்களுக்கு வீடு, வேலைவாய்ப்புகளை வழங்கி தங்கள் வாழ்வாதாரத்திற்கு துணையாக இருக்க வேண்டும் என கண்ணீர் மல்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *