பூமியை தாக்கிய பயங்கரமான சூரிய புயல்!

top-news
FREE WEBSITE AD

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியதன் மூலம் உலகின் பல நாடுகளிலும் வானில் தோன்றிய வர்ண ஜாலத்தை மக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த சூரிய புயலால் சாட்டிலைட், மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம் எனவும் வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனில் நிகழும் பிளாஸ்மா மற்றும் மின்காந்த வெடிப்புகள் பூமியை கடந்து செல்வதை சூரிய புயல் என்கிறோம். இந்த காந்தப் புயல் பூமியின் வான்வெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி பல வர்ண ஜாலங்களை ஏற்படுத்தும்.

இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சக்தி வாய்ந்த சூரியப் புயல் பூமியை தாக்கி வருகிறது. சூரியனில் இருந்து பிளாஸ்மா மற்றும் மின்காந்த அலைகளை வெளியிடும் இந்த நிகழ்வு  நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் தொடங்கியதாக அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வானிலை அமைப்பின் (என்ஓஏஏ) விண்வெளி வானிலை கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு நேரங்களில் பல வண்ண நிறங்களில் வானில் ஜொலிப்பதை மக்கள் வெறும் கண்களால் கண்டு ரசித்துள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து முழுவதும் இந்த நிகழ்வை தென்பட்டுள்ளது.

வானில் நிகழ்ந்த இந்த அதிசய வர்ண ஜாலத்தை ரசித்த மக்கள் பலரும் அதை புகைப்படமாக, வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கி உள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு இந்த சூரிய புயல் நீடிக்கும் என என்ஓஏஏ கணித்துள்ளதால் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் சூரிய புயலின் தாக்கத்தால் சாட்டிலைட் மற்றும் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2003ம் ஆண்டு அக்டோபரில் சுவீடன் நாட்டில் தோன்றிய சூரிய புயலுக்கு 'ஹாலோவீன் ஸ்ட்ரோம்ஸ்' என பெயரிடப்பட்டது. அப்போது தென் ஆப்ரிக்காவில் சில பகுதிகளில் மின் சேவை துண்டிக்கப்பட்டது. இதுவரை கடந்த 1859 செப்டம்பரில் ஏற்பட்ட சூரிய புயலே அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, தந்தி அனுப்புவதற்கான டெலிகிராப் லைன்களில் அதிகப்படியான மின்சாரம் பாய்ந்து டெக்னீசியன்களுக்கு ஷாக் அடித்துள்ளது. சில தந்தி இயந்திரங்கள் எரிந்துள்ளன.

சூரிய புயலால் வானில் ஏற்படும் வர்ண ஜாலத்தை வடக்கின் வெளிச்சம் என்றும், அரோரா பொரியாலிஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு இந்தியாவில் லடாக்கில் தென்பட்டுள்ளது. லடாக்கில் இமயமலையில் உள்ள ஹான்லே டார்க் ஸ்கை ரிசர்வ் என்ற இடத்தில் அதிகாலை 1 மணி முதல் 3.30 மணி வரை அடிவானம் சிவப்பு நிறத்தில் மாறியது. ஹன்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தின் பொறியியலாளர் டோர்ஜே ஆங்சுக், இதுபோன்ற நிகழ்வுகள் லடாக்கில் தென்படுவதை அரிதானது என குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *