எனக்குப் பின் கட்சியை வழிநடத்துபவரை ஒடிசா மக்கள் முடிவு செய்யட்டும் - நவீன் பட்நாயக்!
- Muthu Kumar
- 31 May, 2024
வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தனக்குப் பிறகு வரும் தலைவர் எப்படித் தேர்வு செய்யப்படுவார் என்பதையும் விளக்கியுள்ளார்.
ஒடிசாவில் லோக்சபா தேர்தலுடன் அம்மாநிலச் சட்டசபைக்கும் தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதா தளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக முயன்று வருகிறது.
அங்கு ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்தாண்டு நவம்பரில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியலில் பயணித்து வருகிறார். இவரைக் குறிவைத்தே ஒடிசாவில் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. ஒடிசா மாநிலத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பாஜக அங்குப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதாவது நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பிஜு ஜனதா தள கட்சியின் தலைவராக விகே பாண்டியன் தேர்வு செய்யப்படுவார் என்பதே அவர்கள் பிரச்சாரமாக இருக்கிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கமளித்துள்ளார். விகே பாண்டியன் தனது அரசியல் அவருடைய வாரிசு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.. தனக்குப் பிறகு கட்சியை யார் வழிநடத்துவார்கள் என்பது குறித்தும் தனது வாரிசு யார் என்பது குறித்தும் ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒடிசாவில் அனைத்து முடிவுகளையும் வி.கே.பாண்டியன் தான் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், ஏற்கனவே இந்த விவகாரத்தில் நான் பல முறை விளக்கமளித்துவிட்டேன்.. இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. விகே பாண்டியனை எனது அரசியல் வாரிசாகச் சிலர் கூறுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஏன் இதுபோல ஆதாரமே இல்லாமல் பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை" என்றார்.
மேலும், தனக்கு ஒரு அரசியல் வாரிசை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட நவீன் பட்நாயக், "எனக்கு பிறகு யார் என்பதை ஒடிசாவில் உள்ள மக்கள் தான் முடிவு செய்வார்கள்.. இதை நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். இவை எல்லாம் இயல்பாகவே நடக்கும். இத்தனை காலம் இந்த கட்சி எப்படி மக்களுக்குச் சேவை செய்து வந்ததோ.. வரும் காலத்திலும் தொடர்ந்து அதுவே நடக்கும்" என்றார்.
மேலும் அவர், "இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிச்சயமாக நான் தான் முதலமைச்சராக இருப்பேன்.. நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கட்சித் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது.. இதுவரை நான் அதைச் சிறப்பாக நடத்தி வருகிறேன். வரும் காலத்திலும் இதையே நான் தொடர்ந்து செய்வேன்" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *