எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் - சந்திரபாபு நாயுடு உறுதி!
- Muthu Kumar
- 17 Jun, 2024
ஜூன் 26ஆம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் 18-வது மக்களவையின் முதல் அமர்வின் போது, சபாநாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய பாஜக என்டிஏ கூட்டணி கட்சிகளை அணுகும்.
பாஜகவின் முன்மொழிவுக்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் சம்மதித்தால், தேர்தலுக்கான அவசியமில்லை. இல்லையென்றால், தேர்தல் நடத்த வேண்டி இருக்கும். இந்த ஒரு விவகாரத்தில் மட்டும் பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க சந்திரபாபு நாயுடு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா சபாநாயகர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனாரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் இருக்கிறது.
முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம், எம்பிக்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நிகழும். இதனால் சபாநாயகர் பதவி முக்கியமானதாக மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் சபாநாயகர் பதவியை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இரண்டு பேருமே “சபாநாயகர்” பதவியை தங்களுக்கான “இன்சூரன்ஸ்” ஆக பார்க்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக பல அரசுகளை கவிழ்த்து இருக்கிறது. பல மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது. பல மாநில கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது.
இந்நிலையில், எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி மாற்று கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர்களை தகுதி நீக்கும் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது. உதாரணமாக, எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கான ஆதரவை தெலுங்கு தேசம் வாபஸ் வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது தெலுங்கு தேசம் எம்பிக்களை பாஜக பிரித்து தங்கள் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளது. இதனால் தெலுங்கு தேசம் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் தெலுங்கு தேசத்து எம்பி சபாநாயகராக இருந்தால், அவர் அணி மாறி வாக்களிக்கும் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்.
அதுவே பாஜக எம்பியாக இருந்தால், தெலுங்கு தேசம் எம்பிகளை தகுதி நீக்கம் செய்து அணி மாறும் எம்பிக்களுக்கு ஆதரவாக கூட செயல்படுவார். இதேதான் நிதிஷ் குமார் கட்சியிலும். இதன் காரணமாகவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் பதவியை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதனால் இருவருமே சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டுள்ளனர். என்ன நடந்தாலும் எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டு இருக்கின்றனர். பெரிய அமைச்சரவை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. அதனால் எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என முக்கியமாக சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறாராம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *