அயலகத் தமிழர்களுக்கு ரூ. 10 கோடி நிதியில் புதிய திட்டம் உருவாக்கம்!

- Muthu Kumar
- 13 Jan, 2025
(சென்னையிலிருந்து கு. தேவேந்திரன்)
சென்னை, ஜன. 13-
சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 'அயலகத் தமிழர் தினம்' மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. நான் அமெரிக்கா சென்றபோது எனக்கு அளித்த வரவேற்பை நான் மறக்கவில்லை.நான் இருக்கேன்.கவலைப்படாதீங்க.நீங்களும் தமிழ்நாட்ட மறக்கல.. தமிழ்நாடும் உங்கள மறக்கல..
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் 'வேர்களைத் தேடி' திட்டம் ஒரு மைல் கல். உலகில் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் என்றாலும் அவர்களை தேடிச் சென்று உதவும். வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு நெருக்கமானது. அயல் நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த 2,414 தமிழர்கள் 4 ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளனர்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் வேர்களை அடையாளம் காட்டும் திட்டம்தான் இது. இத்திட்டத்தில் தமிழ்நாடு வந்த பலர் தங்களது சொந்தங்களை கண்டுபிடித்து கண்ணீர் மல்க பாசத்தை கொட்டிய சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் நடந்துள்ளன. அயலகத் தமிழர்களால் பாலைவனம், சோலைவனம் ஆனது. உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும், தாய் மண்ணில் இருப்பதை போன்ற உணர்வை அயலக தமிழர்கள் ஏற்படுத்தினார்கள். எந்த நாட்டில் இருந்தாலும், தமிழ் தான் நம்மை இணைக்கக் கூடிய தொப்புள் கொடி.
அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் என் மீது காட்டிய பாசத்தை என்றும் மறக்க முடியாது. அயலகத் தமிழர்கள் இன்னும் சிறப்பாக வாழ்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவோம்.வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில் நடப்பவைகளை நீங்கள் பார்த்து வருகிறீர்கள், என் ஸ்டைல் சொல் அல்ல, செயல்.
அயலகத் தமிழர்களுக்கு கலை பயிற்சிகள் அளிக்க 100 ஆசிரியர்கள் அனுப்பப்படுவார்கள். 2 ஆண்டுகள் நேரடி கலை பயிற்சிகள் அளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.முன்னதாக அயலகத் தமிழர் தின மாநாட்டில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *