எங்களைத் தொட்டால் அதன் பின் இஸ்ரேல் இருக்காது- ஈரான் எச்சரிக்கை!
- Muthu Kumar
- 03 Oct, 2024
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், "ஈரான் தவறு செய்து விட்டது. இதற்கு நிச்சயம் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்" என்று இஸ்ரேல் தெரிவித்திருந்த நிலையில், "எங்களைத் தொட்டால் அதன் பிறகு இஸ்ரேல் என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவுமே மிஞ்சாது" என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பையும், உலக நாடுகளை அதிர்ச்சியடையவும் செய்துள்ளது.
இருநாடுகளும் சமமான ராணுவ பலத்துடன் இருப்பதால் இது பெரும் போருக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கு பயிற்சி கொடுத்த ஹிஸ்புல்லாவை உருவாக்கியது ஈரான் அரசு என்பதால் அப்போதில் இருந்தே இஸ்ரேலுக்கு ஈரான் மீது பகை இருந்து வருகிறது.
அதன் பின்னர் இஸ்ரேலைக் கண்டுக்கொள்ளாமல் ஈரான் இருந்து வந்த நிலையில், தனது ராணுவத்தை விரிவுபடுத்திய இஸ்ரேல் ஒருகட்டத்தில் எல்லையை மீறி, ஈரானுக்குள் நுழைந்து ஹமாஸ் தலைவரை கொன்றது.
அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் துவங்கியது. தங்கள் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதிய ஈரான், ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட அடுத்த நாளே இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் சர்வதேச நாடுகள் தலையிட்டு ஈரானை அமைதிப்படுத்தின.
இந்நிலையில், தற்போது இஸ்ரேலும், ஈரானும் பழிதீர்க்கும் எண்ணத்தில் நிற்கின்றன. போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இருநாடுகளுமே தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. இந்த போர் பதற்றம் பல நாடுகளின் பொருளாதாரத்தில் இப்போதே எதிரொலிக்க துவங்கியுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், மேலும் எகிறும் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இது குறித்தெல்லாம் ஈரான் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எந்தவிதமான அலட்டலும் இல்லாமல், ஈரான் மீது யார் தாக்கினாலும் அதன் பிறகு இஸ்ரேல் என்பது இருந்த இடமே தெரியாத அளவுக்கு சிதைக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
ஈரான் தவறு செய்துவிட்டது. ஹமாஸும், காஸாவும் கற்றுக்கொண்ட பாடத்தை விரைவில் ஈரானும் கற்கும். எங்களை பாதுகாத்துக்கொள்ளவும், பதில் தாக்குதல் தொடுக்கவும் உறுதியாக இருக்கிறோம்" என்று நெதன்யாகு எச்சரித்திருந்த நிலையில், இதையெல்லாம் அலட்சியம் செய்திருக்கிறது ஈரான்.
இஸ்ரேல் vs ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு நாடுகளும் போரில் தீவிரமாக இறங்கினால் மத்திய கிழக்கில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *