கேள்விக் குறியான ஜெர்மனியின் தமிழ்த்துறை கொலோன் பல்கலைக்கழகம்!

- Muthu Kumar
- 01 Jan, 2025
ஜெர்மனியின் கொலோன் நகரில் கொலோன் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் புலத்தின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்வி துறை செயல்பட்டது.1963 முதல் இயங்கிய இந்த தமிழ்த்துறை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதியுடன் மூடப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவிலான பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்த்தலால் கொலோன் பல்கலைக்கழகத்துக்கு 2014 முதல் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் தமிழ்த் துறை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி இல்லாமல் தமிழ்த் துறை 2 முறை மூடும் நிலை ஏற்பட்டது. அப்போது இந்து தமிழ்திசை நாளிதழில் கொலோன் பல்கலை. தமிழ்த் துறை குறித்து செய்தி வெளியானது. அதன்பிறகு இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.1.25 கோடி, அமெரிக்க வாழ் இந்தியர்களின் ரூ.1.5 கோடி மற்றும் ஐரோப்பிய தமிழர் கூட்டமைப்பின் ரூ.23 லட்சம் ஆகியவற்றால் 2021 ஜூலை மாதம் தமிழ்த் துறை தப்பியது. இந்த நிதி உதவியால் தமிழ், ஆங்கிலம், ஜெர்மனி, சமஸ்கிருதம், இந்தி, பாலி ஆகிய மொழிகள் அறிந்த ஸ்வென் வொர்ட்மான், ஒப்பந்த முறையில் உதவிப் பேராசிரியரானார். அவருடைய பணி காலம் கடந்த அக்டோபருடன் முடிந்துள்ளது. அதன்பிறகு வேறு யாரையும் நியமிக்காமல், கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வந்த தமிழ் துறையை கொலோன் பல்கலை. மூடியுள்ளது.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் ஜெர்மனிவாழ் தமிழர்கள் நிதிப் பற்றாக்குறையால் வேறுவழியின்றி தமிழ்த் துறை மூடப்பட்டு விட்டது. இதில் நிரந்தர பேராசிரியராக உல்ரிக்க நிக்லாஸ் கடைசியாக இருந்தார். இவர், 2022-ல் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் முன்பு, ஸ்வெர்ன் வொர்ட்மான் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டார். அதன்பின், மாணவர் சேர்க்கையும் நடைபெற்றதாக தெரியவில்லை. இதுகுறித்து நிதி அளித்தவர்களும் கேள்வி எழுப்பவில்லை. தமிழ்த் துறை மூடலை தடுக்க இந்தியா சார்பில் ஒரு தமிழ் இருக்கை அமைத்திருக்கலாம். மத்திய அரசு சிங்கப்பூரில் அமைப்பது போன்ற திருவள்ளுவர் மையத்தை கொலோன் பல்கலைக்கழகத்தில் அமைத்திருந்தாலும் இந்த தமிழ்த் துறை தப்பியிருக்கும்.
இனி அதன் நூலகத்திலுள்ள முக்கியமான நூல்கள், பழைய ஓலைச் சுவடிகள் உள்ளிட்டவற்றை காப்பாற்ற வேண்டும். இவற்றை யாராவது பாதுகாத்து ஆய்வுகள் செய்ய முன்வந்தால் அவர்களிடம் அளிக்க பல்கலைக்கழகம் தயாராகும் எனக் கேள்விப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்த் துறை சார்பில் சர்வதேச ஆய்விதழ் ஒன்று வெளியாகி வந்தது. இத்துறையின் அதிகாரப்பூர்வ கலாச்சார தொடர்பு பட்டியலில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், புதுச்சேரியின் பிரெஞ்சு மொழி நிறுவனம், தஞ்சாவூரின் தமிழ்ப் பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
தமிழகத்துக்கு வெளியே உள்ளவற்றில் அமெரிக்காவின் சிகாக்கோவுக்கு அடுத்த நிலையில் இத்துறையின் நூலகம் பெரியது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்கள், தமிழ் இதழ்கள், ஓலைச் சுவடிகள் உள்ளன. அவற்றின் நிலை இப்போது கேள்விக் குறியாக உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *