சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் 'Enterobacter bugandensis' என்ற பாக்டீரியா!
- Muthu Kumar
- 12 Jun, 2024
விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டு அங்கு விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்குள் 'Enterobacter bugandensis' என்ற பாக்டீரியா புகுந்துள்ளதாம்.
சூரிய குடும்பத்தில் பூமியை போல உயிர்கள் வாழக்கூடிய கோள்கள் வேறு ஏதேனும் உள்ளதா? என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். விண்வெளியின் தொடர் ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் (Low orbit) சுற்றி வரும் இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நடைபெற்று, கண்காணிக்கப்பட்டும் வருகிறது. சுருக்கமாக சொல்வது என்றால் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் வீடு போல இது உள்ளது.
இந்த விண்வெளி மையத்திற்கு கடந்த 6 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸிம் மற்றொரு விஞ்ஞானியான பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். ஒரு வார காலம் அங்கு தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்கள். புதிய விண்கலத்தை ஆய்வு செய்யும் விதமாக இவர்களது பயணம் அமைந்தது.
சர்வதேச விண்வெளி மையத்தில் மேலும் 7 விஞ்ஞானிகள் நீண்ட காலமாக தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். வழக்கமாக விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு விண்வெளி குப்பைகள் மற்றும் சிறிய விண்கற்களே அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் தற்போது புதிய அச்சுறுத்தல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் 'Enterobacter bugandensis' என்ற பாக்டீரியா உள்ளதாம்.
மருந்துகளுக்கு கட்டுப்படாத இந்த பாக்டீரியா, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூழலில் மேலும் அதிக வீரியம் மிக்கதாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பாக்டீரியா சுவாச அமைப்புகளை பாதிக்குமாம். இந்த சூப்பர் பக்ஸ்கள் வேறொரு கிரகத்திலோ அல்லது விண்வெளியில் இருந்த உயிரினம் இல்லை எனவும், விண்வெளிக்கு வந்த வீரர்களிடம் இருந்து கண்டறிய முடியாத நிலையில் இது வந்து இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்படும் இந்த சூப்பர் பக் நாசா விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *