இன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரௌடி காக்கா தோப்பு பாலாஜி!
- Muthu Kumar
- 18 Sep, 2024
சென்னையின் பிரபல ரௌடிகளில் ஒருவன் காக்கா தோப்பு பாலாஜி. 36 வயதாகும் இவன் ஆரம்ப காலத்தில் அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்றவன். தனது உறவினரைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவது போல தன்னையும் பார்த்தால் மற்றவர்கள் பயப்பட வேண்டும் என நினைத்து ரௌடிசம் பக்கம் திரும்பினான். 1990களில் சாதாரணமாக சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்ட பாலாஜி பின்னர் வியாசர்பாடி நாகேந்திரன் தொடர்பால் தொடர் கொலைகள், ஆட்கடத்தல், கொலை முயற்சி போன்ற வழக்குகளால் பிரபலமானான்.
சக ரவுடிகளால் காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டு போலீஸ் ரெக்கார்டிலும் காக்கா தோப்பு பாலாஜி ஆனான். ரவுடிகளுக்கு இடையே நடந்த கொலைகள், கூலிப்படைகளை ஏவிக் கொல்லுதல் போன்ற காரியங்களால் சென்னையின் பல காவல் நிலையங்களில் காக்கா தோப்பு பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளன.
9ம் வகுப்பு வரை படித்த பாலாஜிக்கு சிறுவயது முதலே ரவுடி ஆக வேண்டும் என்பது எண்ணமாம். அதற்கேற்ப காக்கா தோப்பு பகுதியில் 1990-களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த யுவராஜ் மற்றும் இன்பராஜ் ஆகியோருடன் நட்புவைத்து கொண்டு பாலாஜியும் குற்றச்செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளார். சென்னை மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் அண்ணன் புஷ்பா என்பவரை யுவராஜ் மற்றும் இன்பராஜ் டீம் கொலை செய்தது. இந்த கொலை தான் பாலாஜியின் முதல் குற்ற சம்பவம்.
இதில் காவல்நிலையம் வரை பாலாஜி செல்ல பின்னாளில் யார் பெரியவன் என்கிற போட்டியில் தனது டீமில் இருந்த யுவராஜை கொலையும் நடந்தது. இந்த சம்பவங்களுக்கு பின்னரே பாலாஜி என்கிற பெயர் காக்கா தோப்பு பாலாஜியாக மாறியது.
பின்னர் சிறையில் இருந்த காக்கா தோப்பு பாலாஜி பிரபல ரவுடிகளான ரவுடி குற நடராஜன், மணல்மேடு சங்கர் போன்றோரின் நட்பால் வட சென்னையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டு தனக்கு தடையாக இருந்தவர்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து அடுத்தடுத்து கொலை செய்ததால் சரித்திர பதிவேடு குற்றவாளியாக மாறினான்.
காக்கா தோப்பு பாலாஜி செய்த கொலை சம்பவங்களில் முக்கியமானது பில்லா சுரேஷ் கொலை. வடசென்னையை சேர்ந்த பில்லா சுரேஷ் என்பவரை அவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி அவரின் மனைவி கண் முன்னரே காக்கா தோப்பு பாலாஜி கொலை செய்தார்.
இந்த கொலைக்கு அடுத்த அரை மணி நேரத்தில் ரவுடி விஜி என்பவரும் பாலாஜியால் கொலை செய்யப்பட்டார். இந்த இரட்டைக் கொலைகள் வடசென்னை பகுதியில் இன்றளவும் பேசுபொருளாக இருப்பதோடு, இந்த சம்பவத்தால் வடசென்னையில் காக்கா தோப்பு பாலாஜியின் பெயரும் பிரபலமானது.
ரவுடியாக இருந்தபோதே செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டதால் பணம் கொட்ட ஆரம்பித்தது. இதனால் முற்றிலுமாக மாறியது காக்கா தோப்பு பாலாஜியின் வாழ்க்கை.
ஒரு கட்டத்தில் சிறையே வாழ்க்கையாகிப்போன காக்கா தோப்பு பாலாஜி சிறைக்குள் இருந்தவாறே குற்றச் சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பது, வெளியில் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டுகளுக்கு ஏற்ப கூலிப்படைகளை ஏவிக் கொலை செய்துவந்ததான்.
அடிக்கடி கைது சிறைவாசத்தை தாண்டி வெளியே வந்தாலும், உடனடியாக தலைமறைவாகி தனது குற்றச் செயல்களை தொடர்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
தமிழகம் முழுவதும் காக்கா தோப்பு பாலாஜி மீது 25 கொலை வழக்குகள், ஆள்கடத்தல், அடிதடி, பணம் கேட்டு மிரட்டல் என 59 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தான் இன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *