நிலவின் மற்றொரு பகுதியில் இருந்து மண்ணை எடுத்து வந்தது சீன விண்கலம்!
- Muthu Kumar
- 26 Jun, 2024
சீனா நிலவு குறித்த மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்திருந்தது. அதாவது, நிலவின் மற்றொரு பகுதியில் விண்கலத்தை தரையிறக்கி, அங்கிருந்து மண்ணை பூமிக்கு கொண்டுவருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
நிலவுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் எப்போதும் பூமியை பார்த்தவாறு இருக்கும். மறுபக்கம், சூரியனை பார்த்தவாறு இருக்கும். நிலவு தன்னை தானே சுற்றாததால் நம்மால் பூமியிலிருந்து நிலவின் மறு பக்கத்தை பார்க்க முடியாது. எனவே தற்போது வரை உலக நாடுகள் அனைத்தும், நிலவின்-பூமியை நோக்கிய பக்கத்தில் மட்டுமே ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன. அங்குதான் ரோவர்களையும் தரையிறக்கியுள்ளன.
இப்படி இருக்கையில் மற்றொரு பக்கத்தின் மீதான ஆய்வை சீனா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 'லாங் மார்ச்-5' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான ராக்கெட் தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஏவப்பட்டது. இதில் Chang'e-6 எனும் ஆய்வுக் கருவி ரோபோ இணைக்கப்பட்டிருந்தது.
இந்த கருவி நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கி, அங்கிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியுள்ளது. இன்று இந்த chang'e -6 எனும் விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறும் பொழுது,
"கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்துக்கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது" என்று கூறியுள்ளனர். இந்த மிஷனில் பங்காற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இந்த மிஷன் ஒட்டுமொத்தமாக 53 நாட்கள் நடந்திருக்கிறது. நிலவை பொறுத்தவரை சீனாவுக்கு இது 6வது பயணமாகும். 6வது பயணத்திலேயே இப்படியொரு சாதனையை சீனா படைத்திருப்பது சர்வதேச விண்வெளி உலகில் பேசுபொருளாகியுள்ளது. அதேபோல, சீனாவின் இந்த வெற்றி அமெரிக்காவை தூண்டிவிட்டிருக்கிறது.
நிலவில் முதன் முதலில் காலடி வைத்தது அமெரிக்காதான். ஆனால், அதன் பின்னர் நிலவு குறித்த ஆய்வுகளை அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட்டது. இப்போது சீனாவின் நடவடிக்கைகளால் ஆர்ட்டெமிஸ் 3 மிஷன் மூலம் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *