சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைக்க ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் புறப்பட்டது!
- Muthu Kumar
- 29 Sep, 2024
விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்வெர்லில் இருந்து 2 விண்வெளி வீரர்களுடன் இந்த டிராகன் விண்கலம் புறப்பட்டு சென்றுள்ளது.
இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், இந்திய வம்சாவளியை சேந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்றனர்.
அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர். வெறும் 8 நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் திட்டத்துடன் இவர்களை நாசா அனுப்பி வைத்தது. ஆனால் சுனிதா வில்லியம்ஸ் உள்பட இருவரும் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
விண்வெளி மையத்தில் 100- நாட்களுக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இவை எதற்கும் பலன் கிட்டவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது. விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது.
இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதன்படி புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்வெர்லில் இருந்து டிராகன் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. பால்கான் 9 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இரண்டு விண்வெளி வீரர்கள் இந்த விண்கலத்தில் உள்ளனர். மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் திரும்புவதற்கு வசதியாக இரண்டு இருக்கைகள் காலியாக உள்ளது. இந்த விண்கலம் தற்போது விண்ணுக்கு புறப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புகிறது. அப்போது சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் அழைத்து வரப்பட இருக்கிறார்கள். இந்த விண்கலத்தில் நாசாவை சேர்ந்த வீரர் நிக் ஹாக்வே மற்றும் ரஷ்ய வீரர் அலெக்ஸாண்டர் கோர்பனோவ் ஆகியோர் உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *