சரவாக்கில் பக்காத்தான் போட்டியிட்டாலும் PH மற்றும் GPS உறவு பாதிக்காது!
- Muthu Kumar
- 11 Oct, 2024
கோலாலம்பூர், அக். 11 -
எதிர்வரும் சரவா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) போட்டியிட்டாலும், காபுங்ஙான் பார்டி சரவாக்- குடனான (ஜிபிஎஸ்) அதன் உறவு இப்போது இருப்பது போலவே தொடர்ந்து இருந்து வரும் என்று சரவாக் மாநில பிகேஆர் நம்புகிறது. பிஎச்-ஜிபிஎஸ் தலைவர்களின் அரசியல் முதிர்ச்சித் தன்மையில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக, அம்மாநில பிகேஆர் துணைத் தலைவர் அஹ்மாட் நஸிப் ஜொஹாரி தெரிவித்தார்.
“ஜிபிஎஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓப்பெங்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒரு முதிர்ச்சியடைந்த நட்பைக் கொண்டிருக்கின்றனர். மாநில சட்டமன்றத் தேர்தல் அவர்களின் நட்பை சிதைத்து விடாது என்று எஃப்எம்டியிடம் நஸிப் தெரிவித்தார்.
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தல் 2021ஆம் ஆண்டில் நடந்தது. 2026ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனது திட்டத்தை சரவாக் பிகேஆர் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, ஜனநாயகத்தின் பெயரால் ஜிபிஎஸ் 'படகை உலுக்க' வேண்டாம் என்று மாநில பிகேஆரை மாநில ஜிபிஎஸ் மூத்த தலைவர் ஒருவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை எச்சரித்திருந்தார்.
தனது நடவடிக்கைகள் சரவாக் மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்திவிடக் கூடுமா என்பது குறித்து சரவாக் பிகேஆர் சிந்திக்க வேண்டும் என்று அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்ஸா என்ற அந்த தலைவர் கூறியிருந்தார்.
பிகேஆர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம், மத்திய அளவில் பக்காத்தான் ஹராப்பா னுடனான ஜிபிஎஸ்ஸின் உறவை பாதிக்கக் கூடுமா என்று கேட்டபோது, இதற்கான பதிலை பக்காத்தானின் உயர்மட்டத் தலைவர்கள்தான் கூறவேண்டும் என்றும் கரிம் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *