சேலத்தில் 56 அடி முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு!
- Muthu Kumar
- 11 May, 2024
சேலத்தில் 56 அடி ராஜ முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். முருகனின் முக அமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்வார்கள்.. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நிறைந்திருக்கும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் குடி கொண்டிருக்கிறார்.
மற்ற கடவுள்களை விட தமிழ் கடவுளான முருகப்பெருமான் வழிபாடு தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாய் இருக்கிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் முருகப்பெருமான் கோயில்கள் அதிகமாக இருக்கிறது. அப்படி ஆத்தூர் அருகே இருக்கும் வடசென்னிமலை முருகன் கோயில் மக்களிடையே பெரும் பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் முருகன் கோயிலில் உள்ள முருகன் சிலை ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. சேலம் தாரமங்கலம் அருகே, ராஜமுருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் பிரதிஷ்டைக்காக சிலையை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது கோவில் நிர்வாகம்.
சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் முருக பக்தர்கள் பல்வேறு எதிர்க்கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அழகென்று செல்லுக்கு முருகன் தானே.. ஆனால் இங்கு என்ன முருகனின் முகம் ஒழுங்கின்றி சீரின்றி உள்ளது என கடுமையா விமர்சித்தனர். நேற்று முழுவதும் இது தொடர்பான பதிவுகளை இணையத்தில் அதிகமாக பார்க்க முடிந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பேசிய போது," சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் கோவில் சிலையைப் போல் எங்கள் ஆலயத்திலும் ஒரு சிலையை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலை செய்யும் நபர்களுக்கு இதனை கொடுத்தேன் ஆனால், எப்படி கட்டப்போறோம் சிலையை என்பது குறித்து ஒரு வரைப்படம் கூட சிலை செய்பவர்கள் காட்டவில்லை என தெரிவித்தார். இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன். நீங்கள் தெரிந்தவர் என்ற காரணத்திற்காகத்தான் இதனைச் செய்ய ஒத்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.
எனினும் அருகில் உள்ள கிராமப்புற மக்கள் கோவிலுக்கு வந்து முருக பெருமானை வழிபாடு செய்து தான் வருகிறார்கள். இதுவரை இந்த சிலைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும் நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை மறுசீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்..
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *